சி.பி.ஐ. புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்


சி.பி.ஐ. புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்
x
தினத்தந்தி 2 Feb 2019 12:29 PM GMT (Updated: 2 Feb 2019 12:29 PM GMT)

சி.பி.ஐ. புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.

சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது.  இது தொடர்பாக மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் மத்திய அரசு புதிய சி.பி.ஐ. இயக்குனரை அறிவிக்கும் என கூறப்பட்டது. இது தொடர்பாக நேற்று நடந்த 2வது கூட்டத்தில் எந்த முடிவும்  எடுக்கப்படவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனக்குழு புதிய சி.பி.ஐ. இயக்குனர் பதவிக்கு மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை தேர்வு செய்திருந்தது. இதில் ஒருவர் புதிய சி.பி.ஐ இயக்குனராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது.  இந்த நிலையில், சி.பி.ஐ. புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  இவர் மத்திய பிரதேச மாநில காவல் துறை தலைவராக பணியாற்றிய அனுபவமுள்ளவர் ஆவார்.

Next Story