கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் முயற்சிக்கிறார்கள் காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு


கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் முயற்சிக்கிறார்கள் காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Feb 2019 10:30 PM GMT (Updated: 9 Feb 2019 9:02 PM GMT)

’கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் முயற்சிக்கிறார்கள்’ என்று காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக குமாரசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ. நாகனகவுடாவை இழுக்க எடியூரப்பா பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இந்த பேரம் தொடர்பான ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். அந்த ஆடியோவில் நாகனகவுடா எம்.எல்.ஏ.வை பா.ஜனதாவுக்கு இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவுடன் எடியூரப்பா பேரம் பேசுவது போல் இடம் பெற்றுள்ளது.

இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக டெல்லியில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

‘கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பிரதமர் மோடி மற்றும் அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர். கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள ஆடியோவில், “பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தால் உங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படியே கோர்ட்டுக்கு சென்றால் நீதிபதிகளை எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கவனித்துக் கொள்வார்” என்று எடியூரப்பா கூறுகிறார்.

இது நீதித்துறையையே அவமதிக்கும் செயலாகும். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும். இந்த பிரச்சினையை திங்கட்கிழமை(நாளை) நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க 20 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க ரூ.450 கோடி செலவிட பா.ஜனதா முன்வந்துள்ளது. இந்த பணம் எந்த பேரத்தின் மூலம் வந்தது. இது தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் பேரத்தில் ஈடுபட்ட எடியூரப்பா மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், கருப்புப்பண தடைச்சட்டங்கள் பாயுமா? எடியூரப்பா வீட்டில் சி.பி.ஐ., அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துவார்களா?

அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இருக்கிறார்கள் என்பது தெளிவாகும்.

கர்நாடக கூட்டணி ஆட்சி கவிழ்ப்பு முயற்சி மற்றும் குதிரை பேரத்தின் பின்னணியில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் இருக்கிறார்கள் என்பது உறுதியாகி உள்ளது.’ இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story