பிரியங்காவை பாதுகாப்புடன் கவனித்து கொள்ளுங்கள்; நாட்டு மக்களிடம் கணவர் வேண்டுகோள்


பிரியங்காவை பாதுகாப்புடன் கவனித்து கொள்ளுங்கள்; நாட்டு மக்களிடம் கணவர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 Feb 2019 1:16 PM GMT (Updated: 11 Feb 2019 1:16 PM GMT)

பிரியங்காவை பாதுகாப்புடன் கவனித்து கொள்ளுங்கள் என அவரது கணவர் வதேரா முகநூலில் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு வகித்து வருகிறார்.  இவரது சகோதரி பிரியங்கா காந்தி கடந்த வாரம் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளராக நியமிக்கப்பட்டார்.  தொடர்ந்து உத்தர பிரதேச மேற்கு பகுதி பொது செயலாளராக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்பட்டார்.

அதன்பின் உத்தர பிரதேசத்திற்கு முதன்முறையாக பிரியங்கா காந்தி இன்று சென்றார்.  அவருடன் ராகுல் காந்தியும் சென்றார்.

இந்த நிலையில், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா முகநூலில் வெளியிட்டுள்ள செய்தியொன்றில், உத்தர பிரதேசத்தில் பணியாற்றுவதற்கான மற்றும் இந்திய மக்களுக்கு சேவையாற்றுவதற்கான உனது புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துகள் பிரியங்கா.

எனது சிறந்த நண்பராக, நல்ல மனைவியாக, நம்முடைய குழந்தைகளுக்கு சிறந்த தாயாக இருந்து வருகிறாய்.

அரசியல் சூழ்நிலை பழிக்கு பழி வாங்கும் மற்றும் ஆபத்து நிறைந்த ஒன்றாக உள்ளது.  ஆனால் மக்களுக்கு சேவை செய்வது அவளது பணி என எனக்கு தெரியும்.  அவளை இந்திய மக்களிடம் நாங்கள் ஒப்படைக்கிறோம்.  பாதுகாப்புடன் கவனித்து கொள்ளுங்கள் என தெரிவித்து உள்ளார்.

கடந்த 1997ம் ஆண்டு இந்த தம்பதி திருமணம் செய்து கொண்டது.  இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

வெளிநாட்டில் சொத்துகள் வாங்க பணமோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளுக்காக கடந்த 3 நாட்களாக அமலாக்க துறை வதேராவிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Next Story