மாட்டைவிட மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் -சச்சின் பைலட்


மாட்டைவிட மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் -சச்சின் பைலட்
x
தினத்தந்தி 11 Feb 2019 1:55 PM GMT (Updated: 11 Feb 2019 1:55 PM GMT)

மாடா? மனிதனா? என்றால் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பேசியுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பசு இறைச்சி விவகாரத்தில் மூவருக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததால் கடும் விமர்சனம் எழுந்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களே விமர்சனம் செய்தனர். இந்நிலையில் பெங்களூருவில் தி இந்து பத்திரிக்கையின் 'ஹடூல்' எனப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் துணை முதல்வருமான சச்சின் பைலட், மாடா? மனிதனா? என்றால் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என கூறியுள்ளார். 

பசுக்கள் வதை மற்றும் பசு கடத்தல் விவகாரங்களில் வேறுபாட்டுடன் செயல்பட வேண்டும். என்னுடைய சொந்தக் கருத்து என்னவென்றால் பெண்கள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும், சக மனிதன் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்வதற்கும்,  கண்ணியமற்ற முறையில் சக மனிதனை தாக்கும் செயல்களுக்கும் கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். புனிதமான விலங்குகளை காப்பாற்றுவது நல்லது. எனக்கு அதில்  நம்பிக்கை உண்டு. ஆனால், மாடா? மனிதனா? என்று வரும்போது மனிதனுக்குத்தான் முக்கியம் தரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். கமல்நாத் மத்தியப் பிரதேசத்திற்காக இப்பிரச்சினைகளில் முடிவெடுப்பதில் சிறந்தவர். ஆனால் ராஜஸ்தானுக்காக அல்ல என்பதுதான் எனது எண்ணம் என கூறியுள்ளார்.

Next Story