மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு - பாதுகாப்பு பணிகள் தீவிரம்


மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 11 Feb 2019 10:00 PM GMT (Updated: 11 Feb 2019 9:27 PM GMT)

மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறக்கப்படுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


திருவனந்தபுரம், 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு-மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் நடை அடைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாதாந்திர பூஜைக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் நடை திறக்கப்படுகிறது. 17-ந்தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்வில் களபாபிஷேகம், சகஸ்ரகலசம், லட்சார்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெறுகிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, அங்கு நடை திறக்கப்படும் காலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

எனவே இந்த போராட்டங்களை தடுக்கும் வகையில் தற்போது பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக நிலக்கல், சன்னிதானம், பம்பை போன்ற பகுதிகளில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதேநேரம் தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் வந்தால் அவர்கள் தடுக்கப்படுவார்களா? என்பது குறித்து இந்து அமைப்புகள் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் நடை திறப்பையொட்டி சபரிமலை வட்டாரத்தில் பதற்றம் நிலவி வருகிறது.


Next Story