பாஜகவுடன் வெறுப்புடன் போராட மாட்டோம் ; மோடியை கட்டி அணைத்தது அவரிடம் இருந்த வெறுப்பை அகற்றத்தான் - ராகுல்காந்தி


பாஜகவுடன்  வெறுப்புடன் போராட மாட்டோம் ; மோடியை கட்டி அணைத்தது அவரிடம் இருந்த வெறுப்பை அகற்றத்தான் - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 14 Feb 2019 10:53 AM GMT (Updated: 14 Feb 2019 11:27 AM GMT)

நாங்கள் பாஜகவுடன் வெறுப்புடன் போராட மாட்டோம். மோடியை கட்டி அணைத்தது அவரிடம் இருந்த வெறுப்பை அகற்றத்தான் என ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார்.

அஜ்மீர்,

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் 30 ஆண்டுகளுக்குப்பின் "ஆதிவேஷன்" எனும் 2 நாள் நிகழ்ச்சியை சேவா தளம் இன்று தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், ராகுல் காந்தி ஆகியோர் இன்று பங்கேற்றனர். நிகழ்ச்சியில்  ராகுல் காந்தி பேசும் போது கூறியதாவது:-

ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் மக்கள் மத்தியில் வெறுப்பை பரப்புகிறார்கள். ஆனால் அவர்களின் செயலுக்கு மாறாக, நாம் அன்பை மக்களிடத்தில் பரப்ப வேண்டும். இதுதான் நமக்கும், அவர்களுக்கும் இடையிலான வேறுபாடு.

வடகிழக்கு மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அமைதியற்ற சூழலை உருவாக்கி விட்டார்கள். பிரதமர் மோடி இந்த நாட்டை தனக்குத் தேவையான 15 முதல் 20 மனிதர்களுக்காகத்தான் நடத்துகிறார்.

பிரதமர் மோடியை பொறுத்தவரை இந்த தேசம் அவருக்கு ஒரு பொருள். தன்னுடைய 20 நண்பர்களுக்கு இந்த தேசத்தை பங்குபோட்டுக் கொடுக்க மோடி விரும்புகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேசம் என்பது அனைவருக்குமான கடல் போன்றது.

மோடி தான் பேசும் பொதுக்கூட்டங்களில் நீண்ட உரையாற்றுகிறார். கடந்த 70 ஆண்டுகளாக நாட்டில் ஒன்றும் நடக்கவில்லை என்று பேசுகிறார். அப்படியென்றால், மகாத்மா காந்தி, சர்தார் படேல், ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், பல்வேறு முதல்வர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் என யாரும் இந்த தேசத்துக்கு ஒன்றும் செய்யவில்லையா. ஒவ்வொரு குடிமகனையும் புண்படுத்தும் வார்த்தை.

மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதியளித்து மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை அறிமுகம் செய்தோம். கடனில் உள்ள விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அளித்தோம். ஆனால், விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதிகளை மோடி அளிக்கிறார். ரூ.3.50 லட்சம் கோடி கடனை தனது நண்பர்களுக்காக மோடி தள்ளுபடி செய்துள்ளார்.

வெறுப்பு என்பது அச்சுறுத்தலின் மற்றொரு வடிவம். அச்சுறுத்தாமல் வெறுப்பு வராது. இதுதான் மோடிக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு. எங்களிடம் வெறுப்பு இல்லை, அதனால் எங்களிடம் அச்சம் இல்லை. ஆனால், பாஜக வெறுப்பைக் காட்டுகிறார்கள், பயத்தை உருவாக்குகிறார்கள்.

என்னைப் பற்றியும், குடும்பத்தை பற்றியும் மோடி தேவையில்லாமல் பேசுகிறார். ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையும் உதாசினப்படுத்துகிறார். காங்கிரஸ் கட்சியை அழித்து விடுவோம் என்கிறார். ஆனால், நான் நாடாளுமன்றத்தில் அவருக்கு வெறுப்புக்கு பதிலாக கட்டி அணைத்து அன்பை அளித்தேன். வெறுப்பை அன்பால்தான் தோற்கடிக்க முடியும்.

நான் மோடியை கட்டித்தழுவும்போது எனக்கு அவரிடம் எந்தவித வெறுப்பும் இல்லை. ஆனால், அவரிடம் வெறுப்பு இருந்தது. அவரின் முகத்தில் நான் பார்த்தேன். அதை அவரால் கையாள முடியவில்லை.

வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பாஜகவை தோற்கடிக்கும். ஆனால், அழிக்க மாட்டோம், யாரையும் கொலை செய்ய மாட்டோம், தாக்க மாட்டோம். ஆனால், தோற்கடிப்போம், அன்பும் செலுத்துவோம்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சேவா தளம் அமைப்பை 1927-ம் ஆண்டு தடை செய்தார்கள். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பை தடைசெய்யவில்லை. மகாத்மா காந்தி, சர்தார் படேல், சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோர் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்தார்கள். ஆனால், ஒருவர் கூட ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கோரவில்லை. ஆனால், வீரசவார்கார் 9 முறை அச்சத்தின் காரணமாக மன்னிப்பு கோரினார். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Next Story