பேச்சுவார்த்தை பற்றி கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை செய்து முடிவு; நாராயணசாமி பேட்டி


பேச்சுவார்த்தை பற்றி கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை செய்து முடிவு; நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 17 Feb 2019 7:40 AM GMT (Updated: 17 Feb 2019 7:40 AM GMT)

பேச்சுவார்த்தைக்கு கிரண்பேடி அழைத்தால் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை செய்து முடிவெடுப்பேன் என நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் பொதுமக்களுக்கான திட்டங்களை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடுப்பதாக கூறியும், அவரை கண்டித்தும் முதல் மந்திரி நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது.

இவரது போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் சென்று ஆதரவு வழங்கினார்.  இதேபோன்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமிக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என கிரண்பேடி செய்தியாளர்களிடம் கூறினார்.  இன்று மாலை 6 மணிக்கு, ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாராயணசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசும்பொழுது, கிரண்பேடி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை. பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை செய்து முடிவெடுப்பேன் என கூறினார்.

Next Story