தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு ரத்து: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை - தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு ரத்து: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை - தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 19 Feb 2019 12:15 AM GMT (Updated: 18 Feb 2019 9:13 PM GMT)

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்தது. இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை நீடிக்கிறது.

புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு படுவதால், அதை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த ஆண்டு மே மாதம் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

அதைத் தொடர்ந்து, அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், கடந்த ஆண்டு ஆகஸ்டு 9-ந் தேதி நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கியது. அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் நிபுணர் குழுவை அமைத்தது.

இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, தூத்துக்குடி பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டு அறிந்தது. பின்னர் நிபுணர் குழு தனது ஆய்வு அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.

அதில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது என்றும், அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள காரணங்கள் ஆலையை மூடுவதற்கு நியாயமானவையாக அமையவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி தேசிய பசுமை தீர்ப்பாய தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், உறுப்பினர் நீதிபதிகள் ரகுவேந்திர ரத்தோர், கே.ராமகிருஷ்ணன், சத்யவான் சிங் கர்பால், நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கியும் தீர்ப்பு கூறியது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த இரு மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு இதுவரை செயல் படுத்தவில்லை. எனவே ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்தது.

இந்த அனைத்து மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ். வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், தமிழ்நாடு கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி ஸ்ரீனிவாசன், அரசு வக்கீல் யோகேஷ் கன்னா, ராகேஷ் சர்மா ஆகியோர் ஆஜரானார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், ரோகிணி மூசா ஆகியோர் ஆஜரானார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தானே நேரில் ஆஜராகி வாதாடினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 7-ந் தேதி அன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்தது. இவ்விவகாரத்தை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு முகாந்திரம் கிடையாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை நீடிக்கிறது. ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் ஸ்டெர்லைட் நிர்வாகம் தங்கள் தரப்பு நியாயத்தை ஐகோர்ட்டில் முறையிடலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்து உள்ளனர்.

தீர்ப்பு விவரம் வருமாறு:-

கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதியில் இருந்து ஆலை மூடப்பட்டு இருப்பதை இந்த கோர்ட்டு அறிந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு முகாந்திரம் கிடையாது என்ற காரணத்தால் கடந்த டிசம்பர் 15-ந் தேதி அன்று தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்படுகிறது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரிப்பதற்கான முகாந்திரம் இல்லை என்ற அடிப்படையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்படுவதால், ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஆலை நிர்வாகம் ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

அப்படி ஆலை நிர்வாகம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தால் கடந்த 9.4.2018-ல் இருந்து ஆலை மூடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி ஆலை நிர்வாகம் ஐகோர்ட்டில் இடைக்கால நிவாரணத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆலை நீண்ட காலத்துக்கு மூடப்பட்டு உள்ளதாலும், இந்த ஆலை முக்கியத்துவம் வாய்ந்த இறக்குமதிக்கான பொருளை உள்நாட்டில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு பிறப்பித்த ஆணை தொடர்பான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்குமாறு ஐகோர்ட்டின் தலைமை நீதிபதிக்கு ஆலை நிர்வாகம் கோரிக்கை முன்வைக்கலாம். இவ்வாறு இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story