ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் : ப. சிதம்பரம் கடும் விமர்சனம்


ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் : ப. சிதம்பரம் கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 24 Feb 2019 4:36 AM GMT (Updated: 24 Feb 2019 4:36 AM GMT)

அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே தொடங்க திட்டமிட்டு, அதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. 

இந்த நிதி 3 தவணைகளாக வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இதற்காக 1 கோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அடுத்த ஓரிரு தினங்களில் மேலும் 1 கோடி பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தற்போது தேர்வு செய்யப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் இன்று பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்படுகிறது. 

சிதம்பரம் விமர்சனம்

இந்த நிலையில், மத்திய அரசின் இந்த திட்டத்தை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக  விமர்சித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ப சிதம்பரம் கூறியிருப்பதாவது:- “ இன்று இந்திய ஜனநாயகத்திற்கு கறுப்பு நாள். ஐந்து பேர் கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ 17. இது உதவித்தொகையா, பிச்சையா, லஞ்சமா? இது ஓட்டுக்கு லஞ்சம் என்பதைத் தவிர வேறு என்ன?. 

மோடி அரசு விவசாயத்தை ஐந்து ஆண்டுகள் சீரழித்து விட்டு இன்று ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ரூ 2000 தரப்போகிறார்கள்!. அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் என்று தெரிவித்துள்ளார். 

Next Story