பாதுகாப்பு படை வீரர்களின் மனித உரிமைகளை பாதுகாக்க கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்


பாதுகாப்பு படை வீரர்களின் மனித உரிமைகளை பாதுகாக்க கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
x
தினத்தந்தி 25 Feb 2019 6:59 AM GMT (Updated: 25 Feb 2019 6:59 AM GMT)

பாதுகாப்பு படை வீரர்களின் மனித உரிமைகளை பாதுகாக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

புதுடெல்லி,

ராணுவ அதிகாரிகளின் மகள்களான பிரீதி கேதார் கோகலே (வயது 19), கஜல் மிஷ்ரா (20) ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோரின் மனித உரிமைகளை காக்க விரிவான கொள்கை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

குறிப்பாக பணியின்போது, தனிநபர்களாலும், கட்டுக்கடங்காத கும்பல்களாலும் தாக்கப்படுகிற பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று இந்த வழக்கின் மூலம் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். 

காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது வன்முறை கும்பலால் நடத்தப்பட்ட கல்வீச்சுகளை வழக்கில் சுட்டிக்காட்டி உள்ளனர். இந்த வழக்கில் எதிர் தரப்பினராக மத்திய அரசு, ராணுவ அமைச்சகம், காஷ்மீர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்திய யூனியன், பாதுகாப்புத்துறை அமைச்சகம், ஜம்மு காஷ்மீர் அரசு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.

Next Story