காஷ்மீரில் பலியான வீரர்களின் பெயர்களை அரசு பள்ளிகளுக்கு சூட்ட ராஜஸ்தான் அரசு முடிவு


காஷ்மீரில் பலியான வீரர்களின் பெயர்களை அரசு பள்ளிகளுக்கு சூட்ட ராஜஸ்தான் அரசு முடிவு
x
தினத்தந்தி 7 March 2019 8:43 PM IST (Updated: 7 March 2019 8:43 PM IST)
t-max-icont-min-icon

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களது பெயர்களை 15 அரசு பள்ளிகளுக்கு சூட்ட ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

ஜெய்ப்பூர்,

காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய விமான படை, பாகிஸ்தான் எல்லையில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்கி அழித்தது.

இதில் தீவிரவாதிகள், தீவிரவாத பயிற்சி பெறுவோர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், வாழ்க்கையில் உண்மையாக ஹீரோவாக வாழ்ந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மற்றும் மாணவ மாணவிகளிடையே தேசியவாதத்தினை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளி கூடங்களில் அவர்களது பெயர்களை சூட்ட ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தானின் கல்வி மந்திரி கோவிந்த் சிங் தோத்சாரா இந்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.  இதன்படி, சுரு, நகாவர் மற்றும் ஜுன்ஜுனு ஆகிய மாவட்டங்களில் தலா 3 பள்ளி கூடங்கள், ஆல்வார் மற்றும் சிகார் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பள்ளி கூடங்கள், ஜெய்சால்மர் மற்றும் ஜோத்பூர் ஆகிய  மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி கூடத்திலும் அவர்களின் பெயர்கள் சூட்டப்படும்.

நாட்டின் எல்லைகளை காக்கும் வீரர்களின் வீரமரணத்திற்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம் என தோத்சாரா கூறியுள்ளார்.

கடந்த பா.ஜ.க. ஆட்சியில் அரசு பள்ளிகளின் பெயர்களை மாற்றுவதற்கான இந்த ஆவணங்கள் கிடப்பில் போடப்பட்டு இருந்தன.  எங்கள் கட்சியின் ஆட்சியில் இவை முடித்து வைக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

Next Story