வரதட்சணைக் கொடுமை: பட்டினி போட்டு மருமகளை கொன்ற மாமியார், கணவர் கைது


வரதட்சணைக் கொடுமை: பட்டினி போட்டு மருமகளை கொன்ற மாமியார், கணவர் கைது
x
தினத்தந்தி 31 March 2019 11:59 AM GMT (Updated: 31 March 2019 1:11 PM GMT)

கேரளாவில் வரதட்சனை கொடுமையால் தனது கணவர், மாமியாரால் பெண் ஒருவர் பட்டினி போடப்பட்டு உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம்,

கேரளா மாநிலம் கொல்லத்தில் உள்ள சந்து லால்-துஷாரா அவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மார்ச் 21-ம் தேதி கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் துஷாரா உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. துஷாரா உயிரிழந்து ஒரு வாரத்திற்கு பின் பல திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

துஷாரா தன் கணவர் மற்றும் மாமியாரால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவர் எத்தனை நாட்கள் கொடுமைப்படுத்தப்பட்டார் என்பது தெரிவில்லை. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் வாக்குமூலம் தர முன்வந்துள்ளதாக கூறினர். 

அவர்கள் மேலும் கூறுகையில், 60 கிலோ எடையில் இருந்த துஷாரா உயிரிழந்தபோது அவர் வெறும் 20 கிலோ எடையில் மட்டுமே இருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் அவர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் வரதட்சனை கொடுமைக்கு உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளனர். உயிரிழந்தபோது அவர் உடலில் சதையே இல்லாத அளவிற்கு துன்புறுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, துஷாராவின் கணவர் சந்துலால் (30) மற்றும் மாமியார் கீதா (55) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். துஷாராவின் இரண்டு குழந்தைகளும் கொல்லத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

துஷாராவின் மரணம் குறித்து வழக்கு விசாரணை நடந்துவருவதாக போலீசார் கூறியுள்ளனர். கேரளாவில் பெண் ஒருவர் இப்படியான ஒரு நிலையில் கொடுமைப்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி பெண்கள் பாதுகாப்பு குறித்து பல சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், துஷாராவை கொடுமைப்படுத்தி கொன்ற கணவர் சந்துலால் மற்றும் மாமியார் கீதா கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கேரளாவில் பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Next Story