ஐதராபாத் தேசிய பூங்காவில் மரம் விழுந்து சுற்றுலாவாசி பலி; ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு


ஐதராபாத் தேசிய பூங்காவில் மரம் விழுந்து சுற்றுலாவாசி பலி; ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
x
தினத்தந்தி 21 April 2019 5:20 AM GMT (Updated: 21 April 2019 7:18 AM GMT)

ஐதராபாத் நேரு தேசிய பூங்காவில் கனமழையால் மரம் விழுந்து பலியான நபரின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் நேரு தேசிய விலங்கியல் பூங்கா அமைந்து உள்ளது.  கோடை விடுமுறையை அடுத்து அதிகளவில் சுற்றுலாவாசிகள் இங்கு தங்களது குடும்பத்தினருடன் வந்து இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர்.  ஆனால் இதுவே சில சமயங்களில் ஆபத்தினையும் வரவழைத்து விடுகிறது.

சமீபத்தில் இந்த பூங்காவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து உள்ளது.  இதனால் வேம்பு, புளி உள்ளிட்ட 50 முதல் 60 வரையிலான பெரிய மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.  பல இடங்களில் பெரிய மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.  அவை மின் கம்பிகளுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தியது.  அவற்றில் சில சுற்றுலாவாசிகள் நடந்து செல்லும் வழியிலும் விழுந்துள்ளன.

இதில், மரம் ஒன்றின் கீழ் அமர்ந்திருந்த புப்பலகுடா பகுதியை சேர்ந்த சுல்தானா (வயது 60) என்ற பெண் பலியானார்.  மரம் விழுந்த சம்பவத்தில் 10 பேர் வரை காயமடைந்தனர்.  பலியானவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

Next Story