தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணை அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் - முன்னாள் தகவல் கமிஷனர் வலியுறுத்தல்


தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: விசாரணை அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் - முன்னாள் தகவல் கமிஷனர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 May 2019 10:02 PM GMT (Updated: 7 May 2019 10:02 PM GMT)

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று முன்னாள் தகவல் கமிஷனர் வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் எழுப்பிய பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மூத்த நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் குழு விசாரணை நடத்தியது. முடிவில், ஆதாரம் என இல்லை என கூறி குற்றச்சாட்டை தள்ளுபடி செய்தது.

ஆனால் இந்த விசாரணை அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி முன்னாள் மத்திய தகவல் கமிஷனர் ஸ்ரீதர் ஆச்சார்யுலு கருத்து தெரிவித்துள்ளார். அவர், “விசாரணை குழு அறிக்கையை அறிந்துகொள்ள பொது மக்களுக்கு உரிமை உண்டு என்ற எண்ணம் வலுத்து வருகிறது. பகிர்ந்து கொள்ள தேவையில்லை என்று கருதுகிற விவரங்கள் தவிர்த்து அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும். குறிப்பாக பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டுகளில் விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்” என்று கூறி உள்ளார்.

மேலும், “கோர்ட்டுகளில் கற்பழிப்பு வழக்குகளில் வழங்கப்படுகிற தீர்ப்பை, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் தவிர்த்து வெளியிட முடிகிறது. அப்படி இருக்கிறபோது, (தலைமை நீதிபதி மீதான புகாரில்) விசாரணை குழுவின் அறிக்கையை தவிர்ப்பது சரியல்ல, அது சட்டப்படியானதும் அல்ல” எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story