பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட், விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது - விஞ்ஞானிகளுக்கு சிவன் பாராட்டு


பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட், விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது - விஞ்ஞானிகளுக்கு சிவன் பாராட்டு
x
தினத்தந்தி 22 May 2019 10:15 PM GMT (Updated: 22 May 2019 8:57 PM GMT)

பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு தெரிவித்தார்.

ஸ்ரீஹரிகோட்டா,

பூமியை தீவிரமாக கண்காணிப்பதற்காக ‘ரிசாட்-2பி’ என்ற செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘இஸ்ரோ’வின் விஞ்ஞானிகள் உருவாக்கினர்.

இந்த செயற்கை கோள், இரவு நேரத்திலும், மோசமான வானிலையிலும், மேகக்கூட்டங்களை ஊடுருவிச் சென்றும் துல்லியமாக கண்காணிக்கும் ஆற்றல் வாய்ந்தது ஆகும்.

இந்த செயற்கை கோளை பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கு ஏற்பாடு ஆனது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 1-வது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்காக ‘கவுண்ட் டவுன்’ என்னும் இறங்குவரிசை ஏற்பாடுகள் 25 மணி நேரம் நடந்தது.

அதன் முடிவில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் ‘ரிசாட்-2பி’ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்ணில் செலுத்தப்பட்ட 15 நிமிடம், 25 வினாடிகளில் 555 கி.மீ. உயரத்தில், 37 டிகிரி சுற்றுவட்டப் பாதையில் செயற்கை கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

மேகமூட்டம் இல்லாமல் வானம் நேற்று காலை தெளிவாக இருந்ததால் ராக்கெட்டின் முதல் பகுதி பிரிந்து சென்றதை வெறும் கண்களால் பார்க்க முடிந்தது.

பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் கே.சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினரும், பத்திரிகையாளர்களும் கூடி இருந்தனர். இவர்களுடன், புதிதாக திறக்கப்பட்ட பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து இருந்து சுமார் 5 ஆயிரம் பார்வையாளர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

எல்லையில் கண்காணிப்பு நோக்கங்களுக்காக, இந்த செயற்கைகோள் அனுப்பும் படங்களைப் பயன்படுத்தலாம். ராணுவ கண்காணிப்பு நோக்கங்களுக்கு இந்த செயற்கை கோள் பயன்படும்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களையும் கூட கண்காணிக்கும். அந்த வகையில் இந்த செயற்கை கோள் உளவு செயற்கை கோள் எனவும் அழைக்கப்படுகிறது.

விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசியதாவது:-

பூமி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட ரிசாட்-2பி என்ற செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் ஆகும். இதுவரை இஸ்ரோ 50 டன் எடை கொண்ட 354 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. இதில் 18 பூமி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 47 செயற்கைகோள்கள் நம்நாட்டு பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவை. மற்ற செயற்கைகோள்கள் மாணவர்களாலும், அயல்நாடுகளாலும் வடிவமைக்கப்பட்டவையாகும்.

தற்போது ஏவப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட், இந்த ஆண்டு ஏவப்பட்டுள்ள 3-வது ராக்கெட்டாகும். பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 48-வது ராக்கெட்டாகும். இதேபோன்று இந்த ராக்கெட்டுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 72-வது ராக்கெட் என்ற பெருமையையும், 1-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்படும் 36-வது ராக்கெட் என்ற பெருமையையும் பெறுகிறது.

செயற்கை கோள் சிறப்பு என்ன?

‘ரிசாட்-2பி’ செயற்கைகோள் 615 கிலோ எடையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இது வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகளையும், விவசாய நிலங்களையும், காடுகளையும் கூட கண்காணிக்கும். இயற்கை பேரிடர் நிகழும் இடங்களையும் கணித்து சொல்லும். இவை தொடர்பான படங்கள், தகவல்களையும் அளிக்கும்.

இதில் 3.6 மீட்டர் விட்டம் கொண்ட ரேடியல் ஆன்டெனா ஒன்றும் பொருத்தப்பட்டு உள்ளது. அதேபோல் 800 வால்ட் திறன் கொண்ட மின்மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இதில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன படம் பிடிக்கும் கருவிகள் பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பும் சிறப்புத்தன்மை கொண்டவை.

இவை, அடர்ந்த மேக மூட்டம் இருந்தாலும் பகல், இரவு எந்த வேளையாக இருந்தாலும் பூமியை மிக துல்லியமாக படம் எடுக்கும் திறன் கொண்டவை.

செயற்கை கோளில், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு ‘விக்ரம் பிராசசர்’ என்ற ‘கணினி சிப்’ மற்றும் ‘ஐ.என்.எஸ்’ என்ற ‘நேவிகேசன்’ வழிகாட்டு சாதனமும் பொருத்தப்பட்டு உள்ளது.

பெங்களூரில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் ஓரிரு நாட்களில் செயற்கைகோள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.

சந்திரயான்-2 விண்கலம், இந்த ஆண்டு ஜூலை 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலான கால கட்டத்திற்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தொடர்ந்து ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட் மூலம் செப்டம்பர் 6-ந் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான இறுதிகட்ட சோதனை நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்புக்காக கார்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர எஸ்.எஸ்.எல்.வி. என்ற சிறிய ரக ராக்கெட்டுகள் மற்றும் அடுத்து ஏவுவதற்காக 10 செயற்கைகோள்கள் மற்றும் ராக்கெட்டுகளின் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. விண்வெளியில் இஸ்ரோவின் சாதனைகள் தொடரும். இதன் மூலம் நாட்டில் அறிவியல் ரீதியான வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story