தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை: காங்கிரஸ் விளக்கம்


தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை: காங்கிரஸ் விளக்கம்
x
தினத்தந்தி 25 May 2019 8:21 AM GMT (Updated: 25 May 2019 8:21 AM GMT)

தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. நாடு முழுவதும் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் வென்றது. அமேதி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோற்றுப்போனது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பாராளுமன்ற தேர்தலில் பெற்ற படுதோல்விக்கு மத்தியில்,  காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்த மிகப்பெரிய தோல்வி, மக்களிடையே எந்த விஷயங்களை சரியாக கொண்டு சேர்க்கவில்லை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி ராகுல் காந்தி கடிதம் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.  மேலும்,  ராகுல் காந்தியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், அவரின் முடிவை நிராகரித்துவிட்டனர் எனவும், ராகுல் காந்தியே தலைவராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்ததனர் எனவும், ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது. பல்வேறு தொலைக்காட்சிகளிலும் இந்தச் செய்தி வெளியானது. 

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை  என்று காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.


Next Story