தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வன்முறை: மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தொண்டர் சுட்டுக்கொலை - திரிபுராவிலும் ஒருவர் படுகொலை


தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வன்முறை: மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தொண்டர் சுட்டுக்கொலை -  திரிபுராவிலும் ஒருவர் படுகொலை
x
தினத்தந்தி 25 May 2019 11:06 PM GMT (Updated: 25 May 2019 11:06 PM GMT)

மேற்கு வங்காளம் மற்றும் திரிபுராவில் தேர்தல் முடிவுகளுக்குப்பின் ஏற்பட்ட வன்முறையில் தலா ஒரு பா.ஜனதா தொண்டர் படுகொலை செய்யப்பட்டனர்.

கொல்கத்தா, 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காளத்தில் பெரும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் சிலர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவங்கள், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரும் தொடர்ந்து வருகிறது.

அங்குள்ள நாடியா மாவட்டத்தை சேர்ந்த சாந்து கோஷ் (வயது 22) என்ற வாலிபர் தேர்தலுக்கு முன் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்திருந்தார். நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதாவுக்காக தீவிர களப்பணியாற்றி வந்த அவர் மீது திரிணாமுல் காங்கிரசார் ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது.

சோர்பரா பகுதியில் உள்ள பள்ளி அருகே நேற்று முன்தினம் இரவு சாந்து கோஷ் தனது நண்பர்களுடன் இருந்த போது, அங்கு வந்த சிலர் சாந்து கோஷை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை திரிணாமுல் காங்கிரசார் சுட்டுக்கொன்றதாக பா.ஜனதா புகார் கூறியுள்ளது. ஆனால் இதை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது.

இந்த கொலை சம்பவத்தால் ஆத்திரமடைந்த பா.ஜனதா தொண்டர்கள் பல இடங்களில் போராட்டத்தில் குதித்தனர். குறிப்பாக ரனாகாட் மற்றும் சியல்டா ரெயில் நிலையங்களுக்கு இடையே பல இடங்களில் மறியலில் ஈடுபட்ட அவர்கள், ரெயில் போக்குவரத்தை சீர்குலைத்தனர். தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்த மறியலால் வடக்கு மற்றும் தெற்கு வங்காளத்துக்கு இடையே போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதைப்போல மாநிலத்தின் பல பகுதிகளில் பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக கேஷ்பூர், கூச்பெகர், தத்தாபுகர் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை சம்பவங்களால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

24 பர்கானாக்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட தெகங்காவில் நடந்த மோதலில் 12 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் மத்திய பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கு அமைதி காக்குமாறு அனைத்துக்கட்சியினருக்கும் மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதி வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதைப்போல மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு முதல்–மந்திரி மம்தா பானர்ஜியும் அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே திரிபுராவிலும் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அங்கு ஆளும் பா.ஜனதாவை சேர்ந்த தொண்டர்கள் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இவ்வாறு நடந்த தாக்குதலில் நேற்று முன்தினம் மிது பவ்மிக் என்ற பா.ஜனதா தொண்டர் கொல்லப்பட்டார். அவரது நண்பர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அங்கு இதுபோன்ற வன்முறைகளில் 117 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்–மந்திரி பிப்லாப் குமார் தேப், வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு உள்ளார்.


Next Story