எண்ணிக்கை பற்றி கவலைப்பட வேண்டாம், எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு கருத்தும் மதிப்பு உடையது - பிரதமர் மோடி


எண்ணிக்கை பற்றி கவலைப்பட வேண்டாம், எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு கருத்தும் மதிப்பு உடையது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 Jun 2019 9:33 PM IST (Updated: 18 Jun 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகள் தங்கள் எண்ணிக்கை பற்றி கவலைப்பட வேண்டாம், அவர்களது ஒவ்வொரு கருத்தும் மதிப்புடையது என்று மக்களவை கூட்டம் தொடங்கும் முன்பு பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி 2-வது முறையாக பிரதமர் பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி நேற்று காலை நாடாளுமன்றத்துக்கு வந்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் கூடியிருந்த பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல் முறை நடைபெற்ற எங்களது அரசு ‘அனைவருக்காகவும், அனைத்து மக்களின் வளர்ச்சிக்காகவும்’ என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டது. அதனால் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து 2-வது முறையாக எங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் ஒரு அரசு மீண்டும் ஆட்சி அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்துக்கு பின்னர் மக்களவையில் அதிக பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுபோல பலவகைகளில் இந்த புதிய மக்களவை வரலாற்று சாதனை படைத்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்துக்கு நாம் வரும்போது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பதை மறந்துவிட வேண்டும். நாம் பிரச்சினைகளை நடுநிலையுடன் சிந்தித்து தேசத்தின் நலனுக்காக உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும். தீவிரமாக செயல்படும் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு கூடுதல் பலமாக அமையும்.

எதிர்க்கட்சிகள் தங்கள் எண்ணிக்கை பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்கள் பிரச்சினைகள் பற்றி தீவிரமாக பேசுவார்கள், அவை நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்பார்கள் என நான் நம்புகிறேன். அவர்களது ஒவ்வொரு கருத்தும், ஒவ்வொரு உணர்வும் எங்களுக்கு மதிப்பு உடையது.

புதிய உறுப்பினர்களுடன் இந்த முதல் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. புதிய சக்தி, புதிய உற்சாகத்துடன் வந்துள்ள அவர்கள் மக்களின் பிரச்சினைகளை அனைவரும் உணரும் வகையில் அவையில் பிரதிபலிப்பார்கள். இந்த கூட்டத்தொடர் பலனளிக்கக் கூடியதாக இருக்கும் என நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


Next Story