பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம்: டெல்லியில் நாளை நடைபெறுகிறது


பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம்: டெல்லியில் நாளை நடைபெறுகிறது
x
தினத்தந்தி 1 July 2019 4:45 AM IST (Updated: 1 July 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

புதிய அரசு பதவி ஏற்ற பின் முதன் முதலாக டெல்லியில் நாளை பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

17-வது நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைத்து உள்ளது. தேர்தலுக்கு பின் முதன் முதலாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் இந்த மாதம் 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. வருகிற 4-ந் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும், 5-ந் தேதி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தையொட்டி, நாடாளுமன்ற பாரதீய ஜனதா கட்சி கூட்டம் (எம்.பி.க்கள் கூட்டம்) கடந்த 25-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மதன்லால் சைனி திடீரென்று மரணம் அடைந்ததால் அன்று அந்த கூட்டம் நடைபெறவில்லை.

அப்போது ரத்து செய்யப்பட்ட பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இது மத்தியில் புதிய அரசு பதவி ஏற்றபின் நடைபெறும் முதல் கூட்டம் ஆகும்.

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களும், பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருப்பதால், சபையில் எம்.பி.க்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் மூத்த தலைவர்களான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் கலந்து கொள்வார்கள். இந்த தேர்தலில் அவர்கள் போட்டியிடாததால் எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள்.

எனவே கடந்த பல ஆண்டுகளில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இல்லாமல் நடைபெறும் பாரதீய ஜனதா எம்.பி.க்களின் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


Next Story