ஜெயில் கைதி கடத்தி கொலை: 11 போலீசாருக்கு ஆயுள் தண்டனை


ஜெயில் கைதி கடத்தி கொலை: 11 போலீசாருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 9 July 2019 1:21 AM GMT (Updated: 9 July 2019 1:21 AM GMT)

ஜெயில் கைதி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 போலீசாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

அமிர்தசரஸ், 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஜெயிலில் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விக்ரம்ஜித் சிங் என்ற கைதி அடைக்கப்பட்டு இருந்தார். 2014–ம் ஆண்டு மே 5–ந் தேதி அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போது அவரை இன்ஸ்பெக்டர் நரங்சிங் தலைமையிலான போலீஸ் குழு பாதாலா என்ற இடத்துக்கு கடத்திச்சென்றது. அங்கு அவரை சித்திரவதை செய்து படுகொலை செய்தனர்.

மறுநாள் விக்ரம்ஜித் சிங் மீதே போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விக்ரம்ஜித் சிங் கொலை செய்யப்பட்டதாக அவரது சகோதரர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் நரங்சிங் உள்ளிட்ட 11 போலீசார் உள்பட 13 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் அமிர்தசரஸ் கூடுதல் செசன்சு கோர்ட்டு முன்னாள் போலீஸ்காரர்கள் 11 பேர் உள்பட 13 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

மேலும் இதில் 14–வது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள உதவி சப்–இன்ஸ்பெக்டர் பல்ஜித் சிங் இதுவரை கைது செய்யப்படவில்லை.

Next Story