நான் ஒரு கழுதை என கூற செய்து மாணவர்களுக்கு வித்தியாச தண்டனை வழங்கிய ஆசிரியை


நான் ஒரு கழுதை என கூற செய்து மாணவர்களுக்கு வித்தியாச தண்டனை வழங்கிய ஆசிரியை
x
தினத்தந்தி 17 July 2019 9:45 AM GMT (Updated: 17 July 2019 9:45 AM GMT)

நான் ஒரு கழுதை என கூற செய்து மாணவர்களுக்கு ஆசிரியை வித்தியாச தண்டனை வழங்கியுள்ளார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் சுருஜ்பூர் நகரில் பள்ளி கூடம் ஒன்று உள்ளது.  இங்கு சமஸ்கிருத ஆசிரியையாக பணிபுரிபவர் கோமல் மண்டல்.  இவர் தன்னிடம் படிக்கும் மாணவர்களிடம் கேள்வி கேட்டுள்ளார்.  ஆனால் சரியாக பதில் அளிக்காத மாணவர்களுக்கு வித்தியாச முறையில் தண்டனை வழங்கி உள்ளார்.

அவர், பள்ளி மாணவர்களை வகுப்புக்கு வெளியே வரிசையாக நிற்க வைத்துள்ளார்.  அவர்களுக்கு முர்கா என்ற தண்டனையை வழங்கியுள்ளார்.  இதன்படி, மாணவர்கள் குனிந்து தங்களது கால்களுக்கு இடையே கைகளை கொண்டு சென்று காதுகளை பிடித்து கொள்ள வேண்டும்.  அவர்களின் முதுகில் புத்தகம் ஒன்றை வைத்து கொள்ளும்படியும் ஆசிரியை கூறியுள்ளார்.

இவை எல்லாவற்றையும் அவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.  ஆனால், சில மாணவர்கள் வீடியோ எடுப்பதற்கு பயந்து தங்களது முகங்களை மறைக்க முயன்றுள்ளனர்.  அவர்களுக்கு பெரிய குச்சி ஒன்றால் அடி விழுந்துள்ளது.  இதன்பின் வீடியோவை நோக்கியபடி, நான் ஒரு கழுதை என்று கூறும்படியும் அவர்களை கூறியுள்ளார்.

இவற்றை தனது வாட்ஸ்அப் ஆசிரியர்கள் குழுவில் பகிர்ந்து உள்ளார்.  அவர்களிடம் இருந்து மாணவர்களின் பெற்றோருக்கு இந்த வீடியோ சென்றுள்ளது.  இதனால் ஆத்திரமுற்ற அவர்கள் நேராக பள்ளிக்கு சென்று ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.

இதுபற்றி மாவட்ட கல்வி அதிகாரி கூறும்பொழுது, சட்டப்படி ஒரு மாணவரை உடல்ரீதியாக அல்லது மனரீதியாக துன்புறுத்த முடியாது.  அதனால் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளார்.

ஆனால் ஆசிரியை, வீடியோவை வைரலாக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.  தனது வகுப்பில் கவனிக்காமல் இடையூறு செய்து கொண்டு மாணவர்கள் இருந்தனர்.  அதனால் இந்த வீடியோவை எடுத்தேன்.  இதனை உங்களது பெற்றோரிடம் காண்பித்து விடுவேன் என அச்சுறுத்தவே வீடியோ பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

Next Story