கர்நாடக சட்டசபை இன்று காலை 10 மணி வரை ஒத்திவைப்பு - சபாநாயகர் நடவடிக்கை


கர்நாடக சட்டசபை இன்று காலை 10 மணி வரை ஒத்திவைப்பு - சபாநாயகர் நடவடிக்கை
x
தினத்தந்தி 22 July 2019 6:46 PM GMT (Updated: 22 July 2019 6:46 PM GMT)

கர்நாடக சட்டசபையை இன்று காலை 10 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதில் ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுவிட்டார். மற்ற 15 எம்.எல்.ஏ.க்களும் எக்காரணம் கொண்டு ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டனர்.

இதனால் முதல்-மந்திரி குமாரசாமி கடந்த 18-ந் தேதி தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த 19-ந் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு, கவர்னர் வஜூபாய்வாலா உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை குமாரசாமி புறக்கணித்தார். பின்னர் 2 நாட்கள் அரசு விடுமுறைக்கு பிறகு நேற்று காலை சட்டசபை கூடியது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் ரமேஷ்குமார் பேசினார். அப்போது அவர், சுப்ரீம் கோர்ட்டு கொறடா உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கவில்லை என்றும், சட்டசபை கட்சிகளின் தலைவர்கள் கொறடா உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் கூறினார்.

அதைதொடர்ந்து பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜெகதீஷ்ஷெட்டர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தேதியை சபாநாயகர் முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் முடிந்த பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் கூறினார். நேற்று இரவு 9.30 மணிக்கு பிறகும் விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.

ராஜினாமா செய்துள்ள 15 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் காங்கிரஸ் மனு வழங்கியுள்ளது. கொறடா உத்தரவு பிறப்பித்தும் அந்த 15 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.

இதற்கிடையே, ராஜினாமா கடிதம் கொடுத்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நாளை காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் சம்மன் அனுப்பியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த உத்தரவிடக்கோரி, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சுதாகர், நாகேஷ் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது.

தொடர்ந்து விவாதம் நடைபெற்று வந்தநிலையில் கர்நாடக சட்டசபையை இன்று காலை 10 மணி வரை ஒத்திவைப்பதாகவும், இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார்.

Next Story