உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. மீது சிபிஐ வழக்குப்பதிவு


உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. மீது சிபிஐ வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 31 July 2019 7:09 AM GMT (Updated: 31 July 2019 7:09 AM GMT)

உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி ஒருவர் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. காவல் நிலையம் சென்று நியாயம் கிடைக்காத காரணத்தினால் யோகி ஆதித்யநாத் வீடு முன்னதாக சிறுமி தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து 2018 ஏப்ரலில் இவ்விவகாரம் வெளியே தெரிய வந்தது. இதுதொடர்பாக கைது நடவடிக்கை மற்றும் விசாரணை தொடர்கிறது. வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

போலீஸ் காவலில் சிறுமியின் தந்தை கொல்லப்பட்டார். இதுதொடர்பாகவும் விசாரணை தொடர்கிறது. இந்நிலையில் நேற்று சிறுமி சென்ற கார் ரேபரேலியில் விபத்துக்குள் சிக்கியது. இதில் சிறுமி படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடன் சென்ற வழக்கறிஞர் மற்றும் உறவுக்கார பெண் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் ரேபரேலி சிறையில் உள்ள உறவினரை பார்க்க சென்ற போது சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 

இது விபத்து என்று கூறப்பட்டாலும், இது விபத்து அல்ல, சதி இருக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.   இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது உத்தர பிரதேச அரசு. 

இதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இதையடுத்து, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை விபத்துக்குள்ளாக்கிய வழக்கை கொலை வழக்காக மாற்றி,  பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் உள்பட 10 பேர் மீது சிபிஐ இன்று முறைப்படி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. 

Next Story