என் மீதோ, குடும்பத்தினர் மீதோ எந்த குற்றச்சாட்டும் இல்லை - ப.சிதம்பரம் பேட்டி


என் மீதோ, குடும்பத்தினர் மீதோ எந்த குற்றச்சாட்டும் இல்லை - ப.சிதம்பரம் பேட்டி
x
தினத்தந்தி 21 Aug 2019 11:30 PM GMT (Updated: 21 Aug 2019 10:56 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் என் மீதோ, என் குடும்பத்தினர் மீதோ எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று ப.சிதம்பரம் கூறினார்.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஒரு அறிக்கையை வாசித்தார். அவர் கூறியதாவது:-

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. என் குடும்பத்தை சேர்ந்த வேறு யார் மீதும் எந்த குற்றச்சாட்டும் இல்லை. எந்த கோர்ட்டிலும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவினர் எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை. மேலும் சி.பி.ஐ. பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் நான் எந்த தவறும் செய்ததாக என் மீது குற்றம் சுமத்தப்படவில்லை.

ஆனாலும் நானும், என் மகனும் ஏதோ பெரிய அளவில் குற்றம் புரிந்துள்ளதாக ஒரு கருத்து உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் பொய்யர்களால் உருவாக்கப்பட்ட பொய்களாகும்.

சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பிய சம்மனுக்கு எதிராக கோர்ட்டை அணுகினேன். கடந்த ஆண்டு மே 31 மற்றும் ஜூலை 25-ந் தேதிகளில் எனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜூலை 25-ந் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இப்போது ஐகோர்ட்டு என் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. என் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

வழக்கறிஞர்களும் நானும் திங்கட்கிழமை இரவு முழுவதும் கண்விழித்து மனுவை தயாரித்தோம். அன்று இரவு முழுவதும் நான் வக்கீல்களுடன் தான் இருந்தேன். ஆனால் நான் சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து ஒளிந்திருப்பதாக விமர்சனம் எழுந்தபோது அதிர்ந்து போனேன். பலவகைகளில் மன்றாடிய பிறகும் என்னுடைய மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நான் சட்டத்தை மதிப்பேன். விசாரணை அமைப்புகளும் சட்டத்தை மதிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை வரை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு காத்திருக்க வேண்டும். சுதந்திரத்தில் நான் எத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறேனோ அதே அளவில் நீதிபதிகள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

எனவே, வெள்ளிக்கிழமை வரை அல்லது அதற்கும் அப்பால் சுதந்திர ஜோதி சுடர்விட்டு பிரகாசித்து ஒளியேற்றட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேள்விகளை கேட்டபோது அவர் பதில் கூறாமல் உடனடியாக புறப்பட்டு சென்றுவிட்டார்.


Next Story