விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் இந்திய வீரர்களுக்கான முதற்கட்ட பரிசோதனை முடிவடைந்தது


விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் இந்திய வீரர்களுக்கான முதற்கட்ட பரிசோதனை முடிவடைந்தது
x
தினத்தந்தி 6 Sept 2019 12:05 PM IST (Updated: 6 Sept 2019 12:05 PM IST)
t-max-icont-min-icon

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் வீரர்களுக்கான முதற்கட்ட பரிசோதனை முடிந்து இருப்பதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து அடுத்த ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்தியா 2022-க்கு முன்பாக மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இஸ்ரோவின் முக்கிய நோக்கம் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவைத் தொடர்ந்து விண்ணுக்கு மனிதர்களை அனுப்பிய சாதனைப் பட்டியலில் நான்காவது உலக நாடாக வேண்டும் என்பது தான்.



ககன்யான் என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணில் செலுத்தப்படும் விண்கலம் சுற்றுவட்டப் பாதையில் 300 முதல் 400 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும்.



இதில் அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் 7 நாட்கள் வரை அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள். இந்த நிலையில் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதற்காக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.



விண்வெளிக்கு செல்லும் 4 இந்திய வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ரஷ்யாவின் யூரி ககாரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்திய வீரர்களுக்கு விண்கலத்தில் அமைக்கும் இருக்கைகளையும், வீரர்கள் அணிவதற்கான விண்வெளி உடைகளையும் ரஷ்யா வழங்குகிறது.



ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டு உள்ளன. இந்திய விமானப் படையின் கீழ் இயங்கும் விண்வெளி மருத்துவக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.


இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு தொடங்கி உள்ளது. வீரர்களுக்கான முதல் கட்ட பரிசோதனை முடிந்து  இருப்பதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மிகதீவிரமான உடல்திறன், மருத்துவம், மனத்திடம் உள்ளிட்ட சோதனைகள் நடைபெற்றன.



இது குறித்து விமானபடை தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஐஏஎஃப் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோஸ்பேஸ் இந்திய விண்வெளி வீரர் தேர்வின் நிலை -1 முடிந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட டெஸ்ட் பைலட்டுகள் விரிவான உளவியல் உடற்பயிற்சி சோதனைகள், ஆய்வக விசாரணைகள், கதிரியக்க சோதனைகள், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அவர்களின் உளவியலின் பல்வேறு அம்சங்களில் மதிப்பீடு செய்யபட்டது என கூறப்பட்டு உள்ளது.



Next Story