ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் மோடி அரசின் அடுத்த இலக்கு - மத்திய மந்திரி தகவல்


ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் மோடி அரசின் அடுத்த இலக்கு - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 11 Sept 2019 4:30 AM IST (Updated: 11 Sept 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் மோடி அரசின் அடுத்த இலக்கு என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார்.

ஜம்மு,

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் பதவி ஏற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, 100 நாள் சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சிகளுக்கு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், அம்மாநிலத்தை சேர்ந்த மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார்.

அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது, மோடி அரசின் மாபெரும் சாதனைகளில் ஒன்று. அது ஒரு துணிச்சலான நடவடிக்கை. ஜி-7 நாடுகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஜனசங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி இப்போது உயிருடன் இருந்திருந்தால், “மோடியும், அமித்ஷாவும் 370-வது பிரிவை ரத்து செய்திருக்கிறார்கள் என்று உலகத்துக்கு சொல்லுங்கள்” என்று பிரகடனம் செய்திருப்பார்.

இந்த முடிவு, காஷ்மீர் மக்களின் நல்வாழ்வுக்காக எடுக்கப்பட்டது. காஷ்மீர் பிராந்தியத்தை சேர்ந்த தலைவர்கள், ஜம்முவை புறக்கணித்து வந்தனர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மோடி அரசு ஜம்முவின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளது. அதற்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிலைமை சீரடையும்போது, காஷ்மீர் பண்டிட்டுகள் அவரவர் இல்லங்களுக்கு திரும்புவார்கள். பயங்கரவாதத்துக்கு இறுதி அத்தியாயம் நடந்து வருகிறது. பயங்கரவாதம் முடிவுக்கு வந்து விட்டால், சுற்றுலா பயணிகளும் பெருமளவு வருவார்கள்.

370-வது பிரிவு நீக்கப்பட்டது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதற்கான படிக்கல்லாக அமையும். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் மோடி அரசின் அடுத்த இலக்கு ஆகும். அது விரைவில் நடக்கும்.

காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. 144-வது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடங்களை தவிர, வேறெங்கும் ஊரடங்கு அமலில் இல்லை. மொபைல், இணையதள சேவைக்கான தடையை நீக்குவது பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துடன் பேசி வருகிறோம். ஏற்கனவே தடையை விலக்கியபோது, சில விஷமிகள், ஆட்சேபகரமான வீடியோக்களை பரப்பி வந்தனர். எனவேதான் மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.


Next Story