தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளுக்கு தலா ரூ.25 லட்சம் இலவச இன்சூரன்ஸ் வசதி அறிமுகம்
டெல்லி-லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளுக்கு தலா ரூ.25 லட்சம் இலவச இன்சூரன்ஸ் வசதி வழங்க முடிவாகி உள்ளது.
புதுடெல்லி,
இந்திய ரெயில்வே துறையை தனியார் மயப்படுத்தும் சோதனை முயற்சியாக, டெல்லி-லக்னோ மற்றும் மும்பை-அகமதாபாத் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்களை ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்க முடிவாகி உள்ளது.
இவற்றில் டெல்லி-லக்னோ இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலா ரூ.25 லட்சம் இலவச இன்சூரன்ஸ் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் பயணிகளுக்கு, லக்னோ சந்திப்பில் ஓய்வு அறை வசதிகளும், புதுடெல்லி ரெயில் நிலையத்தில் சிறப்பு அறை வசதிகளும், கோரிக்கையின் பேரில் கூட்டங்கள் நடத்துவதற்கான அறை வசதிகளும் செய்து தரப்படும்.
இந்த ரெயில்களில், சலுகைகள், சிறப்பு உரிமைகள் போன்றவை கிடையாது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு கட்டணம் வசூல் செய்யப்படும். தட்கல் ஒதுக்கீடு வசதி கிடையாது. எக்சிகியூட்டிவ் வகுப்பு மற்றும் ஏ.சி. சேர் கார் போன்றவற்றில் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு தலா 5 இருக்கைகளும் ஒதுக்கப்படும்.
இதேபோன்று பயணிகள் தங்களது உடைமைகளை வீடுகளில் இருந்து ரெயில் இருக்கைகளுக்கு கொண்டு வருவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தின் அடிப்படையில் சேவை வழங்கும் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது என தேஜஸ் ரெயில் இயக்கம் பற்றி வெளியாகியுள்ள ஆவண தகவல் தெரிவிக்கின்றது.
Related Tags :
Next Story