சிறையில் இருந்த நாற்காலியையும் எடுத்துச்சென்று விட்டனர்: சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் வாதம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு அக்டோபர் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றக் காவலை அக்டோபர் 3-ம் தேதிவரை நீடித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, சிதம்பரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டர். சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகினர். சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.
சிதம்பரம் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், "முன்னாள் அமைச்சர் சிதம்பரம் தனது சிறை அறைக்கு வெளியே ஒரு நாற்காலியில் வழக்கமாக அமர்ந்துள்ளார். ஆனால் அந்த நாற்காலியையும் சிறை அதிகாரிகள் பறித்துக்கொண்டார்கள். அவருக்கு தலையனைகூட இல்லை. படுக்கையில்தான் அமர்ந்து வருகிறார். இதனால், அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது”என்றார்.
அப்போது குறுக்கிட்ட சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, “ இது ஒரு சிறிய பிரச்சினை. இதை பரபரப்பாக்க வேண்டிய அவசியம் இல்லை. துவக்கத்தில் இருந்தே சிதம்பரத்தின் அறையில் எந்த ஒரு இருக்கைகளும் கிடையாது. சட்டத்தில் இருக்கும் வழிகாட்டல்படி, சிதம்பரத்துக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ அதை சிறை அதிகாரிகள் சார்பில் அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹர்," ப.சிதம்பரத்துக்கு மருத்துவப் பரிசோதனை அளிக்க அனுமதி அளித்து, அவரின் நீதிமன்ற காவலை அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டித்து" உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story