36 ஆண்டுகளுக்கு பின் கணவரை முதியோர் இல்லத்தில் அடையாளம் கண்ட மனைவி


36 ஆண்டுகளுக்கு பின் கணவரை முதியோர் இல்லத்தில் அடையாளம் கண்ட மனைவி
x
தினத்தந்தி 26 Sep 2019 2:24 AM GMT (Updated: 26 Sep 2019 2:24 AM GMT)

கேரளாவில் 36 ஆண்டுகளாக பிரிந்திருந்த தம்பதி முதியோர் இல்லத்தில் மீண்டும் இணைந்த ஆச்சரியமூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

கொடுங்கல்லூர்,

கேரளாவின் திரிச்சூரில் வசித்து வந்த தம்பதி சையது மற்றும் சுபத்ரா.  இவர்களுக்கு 65 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.  கடந்த 1983ம் ஆண்டு வேலை தேடி வட இந்தியாவுக்கு சையது சென்று விட்டார்.  இதன்பின்பு இவர்கள் இருவருக்கும் இடையே தொடர்பற்று போனது.

இந்த வருடம் ஆகஸ்டு மற்றும் ஜூலையில் முறையே சையது மற்றும் சுபத்ரா தங்களது சொந்த ஊரான திரிச்சூருக்கு திரும்பியுள்ளனர்.  அங்குள்ள புல்லூத்து என்ற இடத்தில் அமைந்த முதியோர் இல்லத்தில் வசிக்க தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, 36 வருடங்களுக்கு பின் சையதுவின் குரலை கேட்ட சுபத்ரா, அது கடந்த காலத்தில் கேட்ட குரலாக உணர்ந்துள்ளார்.  வயது முதிர்ந்த நிலையிலும், புதிய வருகையாளர் யார் என அறிந்து கொள்ள சுபத்ரா அங்கு சென்றுள்ளார்.

அவர் தனது கணவர் என அறிந்து திகைத்து போனார்.  36 வருடங்களாக ஒருவரையொருவர் காணாத நிலையிலும், வயது முதிர்வால் பார்வை மங்கலான நிலையிலும், தம்பதி ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்.

சையதுவுக்கு 90 வயது ஆகிறது.  சுபத்ராவுக்கு வயது 82.  விதவையான சுபத்ரா தனது முந்தைய திருமணத்தில் இருந்து 2 குழந்தைகளை பெற்றார்.  இதன்பின் தனது வீட்டருகே வசித்த முஸ்லிம் நபரான சையதுவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வேலை தேடி தங்களது 30வது திருமண ஆண்டில் சையது வடஇந்தியாவுக்கு சென்றார்.  இதன்பின் இருவரிடையே தொடர்பில்லை.  பல ஆண்டுகளாக கணவருக்காக காத்திருந்த சுபத்ராவின் குழந்தைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர்.

சுபத்ராவை கவனிக்க யாரும் இல்லாத நிலையில், கொடுங்கல்லூரில் உள்ள கோவிலில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இதன்பின்பு அவர் முதியோர் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த நிலையில், 2 பேரும் மீண்டும் இணைந்து உள்ளனர்.  இதுபற்றி அங்குள்ளவர்களிடம் அவர்கள் கூறியுள்ளனர்.  இதனால் பாயசத்துடன் கூடிய மதிய விருந்து என முதியோர் இல்லம் அமர்க்களப்பட்டது.

சுபத்ரா இனிமையான பழைய பாடல்களை பாடினார்.  மகிழ்ச்சியுடன் உள்ள இருவரும் தங்களது வாழ்வின் மீதமுள்ள காலங்களில் முதியோர் இல்லத்திலேயே ஒன்றாக வசிப்பது என முடிவு செய்துள்ளனர்.

Next Story