சந்திரயான் 2 ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுகிறது : இஸ்ரோ தலைவர் சிவன்


சந்திரயான் 2 ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுகிறது : இஸ்ரோ தலைவர் சிவன்
x
தினத்தந்தி 26 Sep 2019 11:39 AM GMT (Updated: 26 Sep 2019 11:39 AM GMT)

சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அதனுடனான தொடர்பை இழந்தது.

இதனால் விக்ரம் லேண்டர் நிலவின் தரைப் பகுதியில் விழுந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர், நிலவின் தரைப்பகுதியில் ஒருபக்கம் சாய்ந்த நிலையில் விழுந்து இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து விக்ரம் லேண்டரைத் தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்றபோதிலும் முடியவில்லை.

இந்த சூழலில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சிவன் கூறியதாவது:-  சந்திரயான் 2 ஆர்பிட்டர் நன்றாக வேலை செய்து வருகிறது. அதனுடைய அனைத்து இயக்கங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை.  இதுகுறித்து ஆய்வு செய்ய தேசிய அளவிலான குழு ஒன்று  அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின், நாங்கள் எதிர்கால திட்டம் குறித்து பணியாற்றுவோம். இதற்கு ஒப்புதல்கள் மற்றும் பிற நடைமுறைகள் தேவைப்படுகின்றன. அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

Next Story