பிரதமர் மோடி உறவினரிடம் கொள்ளை; ஒருவர் கைது
பிரதமர் மோடியின் சகோதரி மகளிடம் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் சகோதரரின் மகள் தமயந்தி பென் மோடி. இவர் அமிர்தசரஸ் நகரில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை ஒரு வேலையாக சென்றுள்ளார். அங்குள்ள குஜராத்தி சமாஜ் பவனில் அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார்.
இதற்காக பழைய டெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து புதுடெல்லியின் வடக்கே சிவில் லைன் பகுதிக்கு ஆட்டோ ஒன்றில் சென்று இறங்கியுள்ளார். அவரை நெருங்கிய அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் திடீரென அவரிடம் இருந்த பர்சை பறித்து கொண்டு தப்பியோடி உள்ளனர்.
அந்த பர்சில் ரூ.56 ஆயிரம் பணம், 2 மொபைல் போன்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன. சம்பவம் நடந்த பகுதிக்கு சில கி.மீ. தொலைவிலேயே துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
அவர் மீண்டும் நேற்று மாலை அகமதாபாத் நகருக்கு செல்ல திட்டமிட்டு இருந்துள்ளார். இதற்கிடையே திடீரென நடந்த இந்த அதிர்ச்சிகர சம்பவம் பற்றி, தமயந்தி போலீசில் புகார் அளித்து உள்ளார். வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடினர்.
இதில், நோனு என்பவரை கைது செய்துள்ளனர். தமயந்தியின் பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. சமீப காலங்களாக நாட்டின் தலைநகர் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story