ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - சி.பி.ஐ. நடவடிக்கை


ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - சி.பி.ஐ. நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2019 11:15 PM GMT (Updated: 18 Oct 2019 10:35 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது தனிக்கோர்ட்டில் நேற்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற்றதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்ட சிலர் மீது சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரம் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அமலாக்கத்துறையும் அவரை கைது செய்து உள்ளது.

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தனிக்கோர்ட்டில் நீதிபதி லால் சிங் முன்னிலையில் நேற்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், எம்.பி., ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன நிர்வாகி பீட்டர் முகர்ஜி, அந்த நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகியும் பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவியுமான இந்திராணி முகர்ஜி, ஆடிட்டர் எஸ்.பாஸ்கரராமன், நிதி ஆயோக் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சிந்துஸ்ரீகுல்லர், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அனுப் கே.பூஜாரி, மற்றும் சில நபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட 15 பெயர்கள் இடம்பெற்று உள்ளன.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகியான இந்திராணி முகர்ஜி இந்த வழக்கில் அப்ரூவராகவும் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் வருகிற திங்கட் கிழமை இந்த குற்றப்பத்திரிகை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஆர்.பானுமதி தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகள் 9, 13(1பி), இந்திய தண்டனை சட்டம் 120பி, 420, 460ஏ, 471(9) மற்றும் சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த குற்றப்பத்திரிகையின் நகலை நீதிபதிகள் மற்றும் ப.சிதம்பரத்தின் வக்கீல் கபில் சிபலுக்கு துஷார் மேத்தா வழங்கினார்.

பின்னர் அவர் வாதாடுகையில், ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது அன்னிய முதலீடு பெற ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அனுமதி வழங்கிய விவகாரம் மட்டுமின்றி அதற்கு முன்பும் பின்பும் வேறு பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அன்னிய முதலீட்டுக்கான அனுமதி குறித்தும் தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருவதாகவும், அதிலும் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் முக்கியமான தகவல்களை தெரிவித்து இருப்பதாகவும், அவரை தடுக்கும் முயற்சியில் ப.சிதம்பரம் ஈடுபட்டதாகவும், எனவே அந்த நபரை பற்றிய அடையாளத்தை குற்றப்பத்திரிகையில் தாங்கள் குறிப்பிடவில்லை என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார்.

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் அவை தொடர்பான விசாரணைகளும் பாதிக்கப்படலாம் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறி அவர் தனது வாதத்தை முடித்தார்.

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பில் கபில் சிபல் வாதாடுகையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது மட்டுமே ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுப்பதற்கான காரணமாக இருக்க முடியாது என்றார். அத்துடன், 2ஜி வழக்கில்கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நடந்தது என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட துஷார் மேத்தா, “அது கோர்ட்டில் நிலுவையில் உள்ள விஷயம்” என்று கூறி ஆட்சேபம் தெரிவித்தார்.

“ஆனால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதே” என்று கபில் சிபல் கூறியதும், “அந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது” என்று துஷார் மேத்தா தெரிவித்தார்.

உடனே கபில் சிபல், “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் அதை நிரூபிக்கவும் வேண்டும்” என்றார்.

அத்துடன் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளதால் அவற்றை யாரும் அழிக்க முடியாது என்றும், இந்த விவகாரத்தில் துறை தொடர்பான செயலாளர்கள் கோப்பை சரி பார்த்து அனுப்பிய பிறகே ப.சிதம்பரம் கையெழுத்திட்டு இருக்கிறார் என்றும், எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விவாதம் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story