பிராந்திய பொருளாதார ஒப்பந்தம் விவசாயிகளை பாதிக்கும் - சோனியா கடும் எதிர்ப்பு


பிராந்திய பொருளாதார ஒப்பந்தம் விவசாயிகளை பாதிக்கும் - சோனியா கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 11:15 PM GMT (Updated: 2 Nov 2019 10:07 PM GMT)

இந்தியா-ஆசியான் நாடுகளுக்கு இடையேயான பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இந்திய விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்கும் என சோனியா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

ஆசியான் உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, நியூசிலாந்து என 16 நாடுகளுக்கு இடையே தடையில்லா வர்த்தகத்தை மேற்கொள்ளும் வகையில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் நாளை பாங்காக்கில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றை டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி நேற்று நடத்தினார். அதில் உரையாற்றும் போது அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

இந்திய பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியிருப்பதை பார்த்து ஒரு குடிமகனாகவும், பொறுப்புள்ள எதிர்க் கட்சி உறுப்பினராகவும் மிகுந்த வேதனை அடைகிறேன். ஆனால் இந்த நெருக்கடியை மத்திய அரசு மறுப்பது மேலும் வருத்தத்தை தருகிறது.

அரசின் முடிவுகளால் பொருளாதாரம் பின்னடைவை சந்திப்பது போதாதென்று பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தற்போது மற்றுமொரு பலத்த அடிக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது.

இது இந்திய விவசாயிகள், சிறு வணிகர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு சொல்ல முடியாத பெருந்துயரை வருவிக்கும்.

மத்திய அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது மட்டுமின்றி, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்ற முடிவுகளால் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 6 ஆண்டுகளில் 90 லட்சம் வேலையிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு சோனியா தெரிவித்தார்.

இதைப்போல பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார மந்தநிலையில், நமது கொள்கைகள் அனைத்தும் நமது சந்தைகளை நமது விவசாயிகளுக்கு அதிகபட்சம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். தற்போதைய சூழலில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தமானது விவசாயிகள் அழிவு ஒப்பந்தம் என்பதை நிரூபிக்கும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.


Next Story