காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் சாவு; 20 பேர் காயம்


காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் சாவு; 20 பேர் காயம்
x
தினத்தந்தி 4 Nov 2019 8:52 AM GMT (Updated: 4 Nov 2019 7:54 PM GMT)

காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் பலியானதுடன், 20 பேர் காயமடைந்தனர். அதற்கு காரணமான பயங்கரவாதிகளை போலீஸ் தேடி வருகிறது.

ஸ்ரீநகர்,

ஸ்ரீநகரின் ஹரிசிங் பெரியரோடு பகுதியில் பாதுகாப்பு படையினர் முகாமிட்டு இருந்தனர். நேற்று மதியம் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீரென கையெறி வெடிகுண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனால் பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டுகள் பாதுகாப்பு படையினரின் முகாம் அருகில் விழுந்து பயங்கரமாக வெடித்து சிதறியது. அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.

இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 21 பேர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 21 பேரையும் உடனடியாக போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 20 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பரபரப்பான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்த பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Next Story