அயோத்தி தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லை - பிரதமர் மோடி கருத்து


அயோத்தி தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லை - பிரதமர் மோடி கருத்து
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 10:26 PM GMT)

அயோத்தி தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வெளியிட்டது. இந்த தீர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ இல்லை. ராமர் பக்தியோ அல்லது ரஹிம் பக்தியோ, நாம் தேச பக்தியை வலிமைப்படுத்த வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அமைதி மற்றும் நல்லிணக்கம் மேலோங்க வேண்டும்.

130 கோடி இந்தியர்களும் அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பது இந்தியாவின் அமைதிக்கான உள்ளார்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இந்த ஒற்றுமையும், ஒருமைப்பாடும் நாட்டின் வளர்ச்சிப் பாதையை வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு இந்தியரும் அதிகாரம் படைத்தவராகிறார்.

பல ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சினைக்கு நீதித்துறையின் கோவில் (சுப்ரீம் கோர்ட்டு) ஒரு இணக்கமான முடிவை எடுத்துள்ளது. பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு தரப்புக்கும், ஒவ்வொரு கருத்துக்கும் போதுமான நேரமும், வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. இந்த தீர்ப்பு நீதித்துறை நடவடிக்கையின் மீது மக்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

சுப்ரீம் கோர்ட்டின் அயோத்தி தீர்ப்பு முக்கியமானது. ஏனென்றால், எந்த பிரச்சினையையும் சட்டரீதியாக அணுகினால் இணக்கமாக தீர்க்க முடியும் என்பதை இந்த தீர்ப்பு வலியுறுத்தியுள்ளது. இது நமது நீதித்துறையின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் தொலைநோக்கு கண்ணோட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உள்துறை மந்திரி அமித்ஷா, “சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அதன் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த முடிவு இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், கலாசாரத்தையும் மேலும் வலுப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.


Next Story