மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே முதல்வராகிறார்... அஜித் பவார் துணை முதல்வர்


மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே முதல்வராகிறார்... அஜித் பவார் துணை முதல்வர்
x
தினத்தந்தி 11 Nov 2019 5:51 AM GMT (Updated: 11 Nov 2019 5:51 AM GMT)

மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் ஆகிறார்கள். சட்டமன்ற சபாநாயகர் பதவி காங்கிரசுக்கு கிடைக்கும்.

மும்பை,

மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 288 இடங்களில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் பிடித்தன. தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களையும் வென்றன. ஆனால், முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற சிவசேனாவின் தொடர் பிடிவாதம் காரணமாக பாஜகவால்  ஆட்சியமைக்க முடியவில்லை.

இதை தொடர்ந்து மராட்டிய கவர்னர்  பகத்சிங் கோஷ்யரி சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்  ஆதரவுடன் அரசு அமைக்க கவர்னரிடம் உரிமை கோருவார். சிறுபான்மை சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் அரசை காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரிக்க வாய்ப்புள்ளது என்று  தெரிகிறது.

உத்தவ் தாக்கரே  முதல்வராகவே  தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவுக்கு ஆதரவை வழங்கியுள்ளதாக என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதாரங்களின்படி, பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்ய சிவசேனாவும் என்சிபியும் அதிகாரப்பகிர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சிவசேனாவுக்கு முதல்வர் பதவியும், தேசியவாத காங்கிரசுக்கு  துணை முதல்வர் பதவியும் கிடைக்கும்.

ஆதாரங்களின்படி, உத்தவ் தாக்கரே முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் மராட்டிய பிரிவு தலைவர்  ஜெயந்த் பாட்டீல் உள்துறை அமைச்சராகவும்  வாய்ப்புள்ளது.

வெளியில் இருந்து  ஆதரவளிக்கும் காங்கிரசுக்கு சபாநாயகர்  பதவி  கிடைக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story