ரபேல் வழக்கில் நாளை தீர்ப்பு - உச்சநீதிமன்றம் அறிவிப்பு


ரபேல் வழக்கில் நாளை தீர்ப்பு - உச்சநீதிமன்றம் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Nov 2019 7:35 AM GMT (Updated: 13 Nov 2019 7:35 AM GMT)

ரபேல் வழக்கில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

புதுடெல்லி,

இந்தியாவின் விமானப்படையை பலப்படுத்தும் நோக்கத்தில், பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தம் 2016-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில், விமானத்தின் விலையை நிர்ணயம் செய்ததில் இருந்து, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். 

இந்த நிலையில் ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறி, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து, கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பளித்தது. 

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்,  சீராய்வு மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை பிறப்பிக்கிறது.   தலைமை நீதிபதி கொண்ட 3 பேர் அமர்வு தீர்ப்பளிக்கிறது. 


Next Story