பாடகி லதா மங்கேஷ்கர் தொடர்ந்து கவலைக்கிடம் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


பாடகி லதா மங்கேஷ்கர் தொடர்ந்து கவலைக்கிடம் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 13 Nov 2019 9:52 PM GMT (Updated: 13 Nov 2019 9:52 PM GMT)

பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பை,

90 வயது பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த திங்கட்கிழமை சுவாச பிரச்சினையால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், அவரது உடல் நலத்தில் நேற்று ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, கவலைக்கிடமாக உள்ள பாடகி லதா மங்கேஷ்கர் விரைவில் குணமடைய வேண்டி மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘உங்களது உடல் நிலையில் ஏற்பட்டு உள்ள திடீர் அசவுகரியத்தை பற்றி அறிந்து கொள்வதில் அக்கறை கொண்டு உள்ளேன். தீவிரமாக எதுவும் இல்லை என நம்புகிறேன். விரைவில் நீங்கள் இயல்பான மகிழ்ச்சி நிலைக்கு திரும்புவீர்கள்’ என்று கூறி உள்ளார். இதற்கிடையே லதா மங்கேஷ்கர் உடல் நலத்துடன் உள்ளதாகவும், சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அவரது உறவினர் ரச்சனா ஷா தெரிவித்தார்.

இந்தியாவின் இசைக்குயில் என வர்ணிக்கப்படும் லதா மங்கேஷ்கர் பல்வேறு மொழி படங்களில் 30 ஆயிரம் பாடல்களை பாடியவர். பாரத ரத்னா விருதும் பெற்றவர் ஆவார்.


Next Story