சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தனி சட்டத்தை உருவாக்க வேண்டும் - கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தனி சட்டத்தை உருவாக்க வேண்டும் - கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Nov 2019 7:50 AM GMT (Updated: 20 Nov 2019 8:44 PM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தனி சட்டத்தை உருவாக்குமாறு கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல நீண்ட காலமாக தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பை கூறியது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 5 அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இந்த மனுக்களை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த 14-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. ஆனால், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு நீதிபதிகள் தடை விதிக்கவில்லை. இதனால் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரை கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பு நடைமுறையில் இருக்கும்.

இதற்கிடையே, கேரளாவின் பந்தள அரச குடும்பத்தைச் சேர்ந்த ரேவதி நல் ராமவர்மா ராஜா உள்ளிட்டோர் ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கேரளத்தில் உள்ள 150 கோவில்களை இணைத்து திருவாங்கூர் கொச்சி இந்து சமய நிறுவன சட்டத்தை மாநில அரசு இயற்றி உள்ளது. ஆனால் சபரிமலை கோவில் என்பது தனி அடையாளமாக உள்ளது. எனவே சபரிமலை கோவிலுக்கு என்று தனிச் சட்டத்தை உருவாக்க கேரள அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

திருவாங்கூர் கொச்சி இந்து நிறுவனங்கள் சட்டத்தில், கோவில் நிர்வாக குழுவில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடத்தை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால் சபரிமலை அய்யப்பன் கோவிலை பொறுத்தவரை, அந்த கோவிலில் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி வழங்காத நடைமுறை பாரம்பரியமாக உள்ளது. எனவே, கோவிலை நிர்வாகம் செய்யும் குழுவில் பெண்களை இடம் பெற செய்யக் கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.

அப்போது, கேரள அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ஜி.பிரகாஷ் வாதாடுகையில், ஏற்கனவே இயற்றப்பட்ட திருவாங்கூர் கொச்சி இந்து நிறுவனங்கள் சட்டம் கேரளாவில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பொருந்தும் என்பதால், இந்த சட்டத்தையே சபரிமலை கோவிலுக்கும் அமல்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், “சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவை தற்போது 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் கேரள அரசு கொண்டு வந்துள்ள திருவாங்கூர் கொச்சி இந்து நிறுவனங்கள் சட்டத்தில் கோவில்களை நிர்வாகம் செய்யும் குழுவில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இடம் பெறச் செய்வது எப்படி பொருத்தமாக இருக்கும்?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு கேரள அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பதில் அளிக்கையில், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு செய்யலாம் என்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்களை விசாரிக்கும் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருவேளை அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று தீர்ப்பு வழங்கினால், தற்போது உள்ள சட்டத்தில் கோவிலை நிர்வாகம் செய்யும் குழுவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே இடம் பெறச் செய்வோம் என்றார்.

கோவில் நிர்வாக குழுக்களில் பெண்களை இடம் பெற செய்வது என்பது அவர்களுக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதன் ஒரு பகுதியாகத்தான் கேரள அரசு இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளது என்றும் அப்போது அவர் கூறினார்.

அதற்கு நீதிபதி பி.ஆர்.கவாய், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பு இன்னும் அமலில்தான் உள்ளது என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், திருவாங்கூர் கொச்சி இந்து நிறுவனங்கள் சட்டத்தை பொறுத்தவரை பெண்களையும் ஒருங்கிணைத்து கோவிலை நிர்வகிக்கும் வகையில் உள்ளது என்றும், ஆனால் அது மட்டும் போதாது என்றும், சபரிமலை கோவிலுக்கு என்று தனியாக ஒரு சட்டத்தை இயற்றி வருகிற ஜனவரி 3-வது வாரத்துக்குள் அதை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.


Next Story