மராட்டியத்தில் இழுபறி முடிவுக்கு வருகிறது: நாளை மூன்று கட்சிகளும் ஆட்சி அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுகின்றன


மராட்டியத்தில் இழுபறி முடிவுக்கு வருகிறது: நாளை மூன்று கட்சிகளும் ஆட்சி அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுகின்றன
x
தினத்தந்தி 21 Nov 2019 5:44 AM GMT (Updated: 21 Nov 2019 5:44 AM GMT)

மராட்டியத்தில் இழுபறி முடிவுக்கு வருகிறது தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திக்க உள்ளனர், நாளை 22-ந்தேதி அரசு அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

புதுடெல்லி

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. ஆனால் முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதாலும், அதற்கு பாரதீய ஜனதா மறுத்ததாலும் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து, எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால், கடந்த 12-ந் தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பாரதீய ஜனதாவுடன் மோதலை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஜனாதிபதி ஆட்சி அமலான பிறகு அந்த முயற்சியில் சிவசேனா தீவிரம் காட்டியது. இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனாவுடன் கைகோர்க்க முதலில் தயங்கிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், பின்னர் ஆட்சி அமைக்க சம்மதித்தன. இதற்காக மூன்று கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்து பேசி கூட்டணி அரசில் செயல்படுத்த வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்தனர் அது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் டெல்லியில் ஒரு பேட்டியின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்  மழுப்பலான பதிலால் மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த  நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மதியம்  சந்தித்துப் பேசினார். அப்போது மராட்டிய  விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.

முன்னதாக காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சித் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரை மராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினார். கூட்டத்தில் பாலாசாகேப் தோரத், பிருத்விராஜ் சவான், நசீம் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் நேற்று  மாலை காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். காங்கிரசுக்கும்  தேசியவாத காங்கிரசுக்கும் இடையே நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில்   காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா அடங்கிய கூட்டணி அடுத்த வாரத்திற்குள் மராட்டியத்தில் அரசு அமைக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளது.

இந்த சந்திப்புக்கு பிறகு காங்கிரசும்- தேசியவாத காங்கிரசும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது  காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் ஒரு "நிலையான" அரசாங்கத்தை அமைத்து மாநிலத்தில் அரசியல் நிச்சயமற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டுவரும் என அறிவித்தன.

முன்னதாக,  தேசியவாத காங்கிரஸ்  நவாப் மாலிக் மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் நிருபர்கள்  கூட்டத்தில் அரசு அமைப்பதற்கு மூன்று கட்சிகளும் கைகோர்க்க வேண்டியிருக்கும் என்று கூறியபோதும் சிவ சேனா  பெயரை குறிப்பிடவில்லை. காங்கிரசும்- தேசியவாத காங்கிரசும் ஒரு "நிலையான" அரசை வழங்கும் என்று கூறினர். நேற்று இரவு பேட்டியின் போதே சிவ சேனாவின் பெயரைக் குறிப்பிட்டு பேசினர் இதனால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது.

நள்ளிரவில் மற்றொரு சுற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் பின்னர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் கூறும் போது  ஆலோசனை கூட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். நாளை மீண்டும் சந்திப்போம், பின்னர் வெள்ளிக்கிழமை சிவசேனாவுடன் ஆலோசனை நடத்த மும்பைக்கு செல்கிறோம். நாளை மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம் என கூறினார்.

இது தொடர்பாக மூன்று கட்சிகளும் நாளை நவம்பர் 22 வெள்ளிக்கிழமை கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் முறையான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்  மற்றும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இன்று மீண்டும் கூடி மராட்டியத்தில் அரசு உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தம் தொடர்பாக கடைசி நிமிட ஆலோசனை நடத்த உள்ளனர்.

அடுத்த இரண்டு நாட்களில் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் மற்றும் சிவ சேனா இடையே பிரிக்கப்பட வேண்டிய முக்கிய இலாகாக்கள் குறித்து  முடிவு செய்யப்படும்.

மராட்டிய முதல்வர்  ஆகும் முதல் வாய்ப்பு தேசியவாத காங்கிரசுக்கு கிடைக்கும் என்றும், தேசியவாத காங்கிரஸ்  தலைவரான சரத்பவார் அல்லது அவரது மகள் சுப்ரியா சூலே காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா கூட்டணியின்  முதல்வராக வருவார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story