ஏமன் நாட்டில் இருந்து கடல் வழியாக தப்பிவந்த தமிழக மீனவர்கள்; கடலோர காவல்படை உதவியுடன் கொச்சி வந்தனர்


ஏமன் நாட்டில் இருந்து கடல் வழியாக தப்பிவந்த தமிழக மீனவர்கள்; கடலோர காவல்படை உதவியுடன் கொச்சி வந்தனர்
x
தினத்தந்தி 30 Nov 2019 11:00 PM GMT (Updated: 30 Nov 2019 8:04 PM GMT)

ஏமன் நாட்டில் இருந்து கடல் வழியாக தமிழக மீனவர்கள் உள்பட 9 பேர் மீன்பிடி படகிலேயே தப்பி கொச்சி வந்து சேர்ந்தனர்.

கொச்சி, 

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்களும், கேரளாவை சேர்ந்த 2 மீனவர்களும் ஏமன் நாட்டில் உள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனத்துக்காக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அந்த நிறுவனம் அவர்களுக்கு படகும் வழங்கியிருந்தது. ஆனால் இந்திய மீனவர்கள் 9 பேருக்கும் அந்த நிறுவனம் பேசியபடி ஊதியம் வழங்கவில்லை என தெரிகிறது.

அதோடு தங்குமிடம், உணவு போன்ற அடிப்படை வசதிகளையும் செய்துதரவில்லை. இதனால் 9 பேரும் ஏமன் நாட்டில் இருந்து தப்பிச்செல்ல திட்டமிட்டனர். இதற்காக வழக்கம்போல கடலில் மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டனர். அந்த நிறுவனத்தின் படகிலேயே ஏமன் நாட்டில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டனர்.

இதற்கிடையே கன்னியா குமரியில் உள்ள தெற்கு ஆசிய மீனவர்கள் சங்கம் கடந்த வியாழக்கிழமை கடலோர காவல் படைக்கு இதுபற்றி இமெயிலில் தகவல் தெரிவித்தது. 9 இந்திய மீனவர்கள் கடலில் தத்தளிப்பதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் விசாரணையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் மனைவியை தொடர்புகொண்டு விசாரித்தனர். அவரது கணவர் 27-ந் தேதி காலை 5.30 மணிக்கு தன்னை தொடர்புகொண்டதாக தெரிவித்தார். அப்போது அவர்கள் லட்சத்தீவில் இருப்பதாகவும், கொச்சி நோக்கி செல்வதாகவும் தெரிவித்தனர். அதோடு படகில் போதிய எரிபொருள் மற்றும் உணவு இல்லை என்றும் தெரிவித்ததாக அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கொச்சியில் இருந்து ஒரு கண்காணிப்பு விமானம் அவர்கள் படகை கண்டுபிடிப்பதற்காக 28-ந் தேதி மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானம் கொச்சியில் இருந்து 100 நாட்டிக்கல் மைல் தொலைவில் படகு இருப்பதை கண்டுபிடித்தது. அந்த தகவலின் அடிப்படையில் கடலோர காவல்படையின் ஆர்யமான் கப்பல் புறப்பட்டு சென்றது.

பின்னர் 9 மீனவர்களும் 29-ந் தேதி பாதுகாப்பாக கொச்சிக்கு மீட்டுக் கொண்டுவரப்பட்டனர். 9 மீனவர்களும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் வந்த படகும் மீட்கப்பட்டு கொச்சி கடலோர போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story