பெண் டாக்டர் கற்பழித்து கொலை: தெலுங்கானா முழுவதும் போராட்டம் வலுக்கிறது


பெண் டாக்டர் கற்பழித்து கொலை: தெலுங்கானா முழுவதும் போராட்டம் வலுக்கிறது
x
தினத்தந்தி 2 Dec 2019 10:30 PM GMT (Updated: 2 Dec 2019 9:04 PM GMT)

பெண் டாக்டர் கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து தெலுங்கானா முழுவதும் போராட்டம் வலுக்கிறது. குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்தி மாணவர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐதராபாத்,

ஐதராபாத்தை சேர்ந்த பெண் டாக்டர், சமீபத்தில், 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு அவர் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் எரிந்த நிலையில் மறுநாள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஈடுபட்ட லாரி ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அவர்கள் செர்லாபள்ளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக விரைவு கோர்ட்டு அமைக்கப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்ட இச்சம்பவத்துக்கு எதிராக தெலுங்கானா முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. மாணவர்கள், வக்கீல்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் என்ற ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மாணவர் அமைப்பு சார்பில் பல்வேறு கல்வி நிறுவன மாணவர்கள் பங்கேற்ற பேரணி நேற்று ஐதராபாத்தில் நடந்தது.

பக்லிங்கம்பள்ளியில் இருந்து இந்திரா பூங்காவரை இந்த பேரணி நடந்தது. குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்றும், நீதி வேண்டும் என்றும் கோஷமிட்டபடி சென்றனர்.

தெலுங்கானா வக்கீல்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பேரணி நடந்தது. ஐதராபாத் ஐகோர்ட்டு அருகே அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதுபோல், மாநிலத்தின் பல பகுதிகளில் மாணவர் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்தன.

இதற்கிடையே, இவ்வழக் கில் கைதான 4 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்நகர் கோர்ட்டில் சைபராபாத் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்குமாறு கோருவோம் என்று தெலுங்கானா போலீஸ் டி.ஜி.பி. மகேந்தர் ரெட்டி தெரிவித்தார்.

ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மக்களவையில் உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று நாடாளுமன்றத்திலும் கடுமையாக எதிரொலித்தது. மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது இந்த விவகாரம் குறித்து விவாதித்த எம்.பி.க்கள் அனைவரும் கட்சி பேதமின்றி கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இந்த சம்பவத்தை எழுப்பி பேசிய காங்கிரஸ் உறுப்பினர் உத்தம் குமார் ரெட்டி, ‘ஐதராபாத்தில் உயர் பாதுகாப்பு கொண்ட பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மிருகத்தனமான இந்த செயலுக்காக நாம் அனைவரும் தலைகவிழ வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. உறுப்பினர் டி.ஆர். பாலு, ‘இந்த கொடூர செயலை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்த தெலுங்கானா உள்துறை மந்திரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கண்டனம் தெரிவித்தார்.

உறுப்பினர்களின் இந்த கருத்துகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இதுபோன்ற ஒரு கொடூர சம்பவத்தை கண்டிக்க வார்த்தைகளே இல்லை. இதைவிட பெரிய மனித தன்மையற்ற செயல் என்று எதுவும் இல்லை. இந்த சம்பவத்துக்காக ஒட்டுமொத்த நாடும் வெட்கப்படுகிறது, வேதனைப்படுகிறது.

அதிகரித்து வரும் இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகளை மேற்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. அந்தவகையில் இதற்காக ஒருமனதாக சட்ட திருத்தம் கொண்டுவரவும் அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவும் கண்டனத்தை பதிவு செய்தார். இதுபோன்ற சம்பவங்கள் வருத்தமும், வேதனையும் கொடுக்கிறது என்று கூறிய அவர், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாது என நாம் எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை ஒட்டுமொத்த அவையும் ஒரே குரலில் கண்டிப்பதாக கூறிய ஓம் பிர்லா, இந்த விவகாரத்தை நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக்குழு விவாதித்து தேவைப்பட்டால் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் குறிப்பிட்டார்.


Next Story