உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் கிடந்த எலி


உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் கிடந்த எலி
x
தினத்தந்தி 3 Dec 2019 9:12 PM IST (Updated: 3 Dec 2019 9:12 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்காக தயார் செய்யப்பட்ட உணவில் எலி ஒன்று கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் முசாபர்பூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில்  மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்ட மதிய உணவில் எலி ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தின் ஹாபூர் பகுதியில் உள்ள ஜன் கல்யான் சன்ஸ்தா கமிட்டி என்ற தனியார் அமைப்பு ஒன்று மாணவர்களுக்கான உணவை தயார் செய்துள்ளது. உணவில் எலி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டவுடன் உணவு பரிமாறுவது நிறுத்தப்பட்டது.

ஆனால் அதற்குள் சிலர் உணவை சாப்பிட ஆரம்பித்திருந்தனர். அவர்களில் ஒன்பது குழந்தைகளுக்கும் இரு ஆசிரியருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி ராம் சாகர் திரிபாதி, கவனக்குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தனியார் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன் உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் ஒரு பள்ளியில், ஒரு வாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பாலை கலந்து மாணவர்களுக்கு வழங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பர் மாதம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் சப்பாத்திக்கு உப்பை வைத்து சாப்பிடும் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

Next Story