கள்ள துப்பாக்கி வைத்திருந்தால் ஆயுள் தண்டனை - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது


கள்ள துப்பாக்கி வைத்திருந்தால் ஆயுள் தண்டனை - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
x
தினத்தந்தி 9 Dec 2019 9:05 PM GMT (Updated: 9 Dec 2019 9:05 PM GMT)

கள்ள துப்பாக்கி தயாரிப்பவர்கள், வைத்திருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதற்கான மசோதா, மக்களவையில் நிறைவேறியது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ஆயுதங்கள் திருத்த மசோதா 2019 நிறைவேறியது. இந்த மசோதாவின்படி, கள்ள துப்பாக்கி தயாரிப்பவர்கள், வைத்திருப்பவர்கள் ஆகியோர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படுவார்கள்.

மேலும், திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கியால் சுட்டு, மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களுக்கு 2 ஆண்டுவரை ஜெயில் தண்டனை அல்லது ரூ.1 லட்சம்வரை அபராதம் விதிக்கப்படும். இதன் மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ஆயுத கட்டுப்பாடு விதிப்பது அவசியம் என்பதால் இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறினார்.

கப்பல் மறுசுழற்சி மசோதா

சேதமடைந்த கப்பல்களை மறுசுழற்சி செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இது ஏற்கனவே மக்களவையிலும் நிறைவேறி விட்டதால், இரு அவைகளின் ஒப்புதலை பெற்று விட்டது.

இந்த மசோதாவால், மறுசுழற்சி செய்யப்படும் கப்பல்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், வேலைவாய்ப்பு உயரும் என்றும் மத்திய கப்பல்துறை மந்திரி மன்சுக் மண்டாவியா தெரிவித்தார்.

கடற்கொள்ளை தடுப்பு மசோதா

கடற்கொள்ளை தடுப்பு மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. கடற்கொள்ளைக்கு கடுமையான தண்டனை அளிக்க இது வகை செய்கிறது. அறிமுக நிலையிலேயே காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், குற்றத்தின் தன்மையை பொறுத்து ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க மசோதாவில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

“மோட்டார் வாகன துறையில் வேலை இழப்பு இல்லை”


மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மெக்வால் கூறியதாவது:-

மோட்டார் வாகன உற்பத்தி துறை இப்போது பி.எஸ்.4-ல் இருந்து பி.எஸ்.6-க்கு இடம்பெயர்ந்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கும் நாம் மாற வேண்டி இருக்கிறது. இது ஒரு மறுசுழற்சிதான். எனவே, கவலைப்பட வேண்டியது இல்லை. யாருக்கும் வேலை இழப்பு ஏற்படாது. நிலைமை சீரடைய மத்திய அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

“256 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை”

நாட்டில் 256 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய ஜல் சக்தி மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் மாநிலங்களவையில் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-

இந்த சிக்கலை தீர்க்க சிறப்பு பிரசாரம் மேற்கொள்ளப்படும். 21 பெருநகரங்களில் 15 நகரங்களில், அடுத்த ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் வற்றி விடும் என்று நிதி ஆயோக் கூறியுள்ளது. அங்கு ஆறு, அணை என இரட்டை நீர் ஆதாரம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story