இந்து - முஸ்லீம் பிரிவினையை மீண்டும் உருவாக்க முயற்சிக்காதீர்கள்; சிவசேனா


இந்து - முஸ்லீம் பிரிவினையை மீண்டும் உருவாக்க  முயற்சிக்காதீர்கள்;  சிவசேனா
x
தினத்தந்தி 11 Dec 2019 12:10 PM IST (Updated: 11 Dec 2019 12:10 PM IST)
t-max-icont-min-icon

இந்து - முஸ்லீம் பிரிவினையை மீண்டும் உருவாக்க முயற்சிக்காதீர்கள் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முன் தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  மாநிலங்களவையில், இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். மக்களவையில், குடியுரிமை மசோதாவை சிவசேனா ஆதரித்தது.

 மராட்டியத்தில்  காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்துள்ள சிவசேனா,  காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு அளித்தது பல்வேறு விமர்சனங்களுக்கும் யூகங்களுக்கும் வழி வகுத்தது.

இதையடுத்து, சில திருத்தங்கள் செய்யாவிட்டால் மாநிலங்களவையில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று சிவசேனா நேற்று தெளிவுபடுத்தியது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், “  இந்த மசோதாவில்  எங்களுக்கு உள்ள  சில சந்தேகங்களை தெளிவுபடுத்தப்பட  வேண்டியுள்ளது. எங்களுக்கு திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால், நாங்கள் மக்களவையில் எடுத்த நிலைப்பாட்டுக்கு மாறான நிலைப்பாட்டை எடுப்போம். 

குடியுரிமை மசோதா விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியல் செய்வது சரியானது அல்ல, எனவே இந்த விஷயத்தில் வாக்கு வங்கி அரசியலில்  ஈடுபடக்கூடாது. இந்து முஸ்லீம் பிரிவினையை மீண்டும் உருவாக்க முற்படாதீர்கள். அதேபோல், இலங்கையை சேர்ந்த  தமிழ், இந்துக்கள் பற்றி மசோதாவில் எதுவும் இல்லை” என்றார். 

Next Story