தேசிய செய்திகள்

எனது பெயர் வீர சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி: ராகுல் காந்தி பேச்சால் புதிய சர்ச்சை + "||" + My name is not Veer Savarkar, Rahul Gandhi: New controversy by Rahul Gandhi

எனது பெயர் வீர சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி: ராகுல் காந்தி பேச்சால் புதிய சர்ச்சை

எனது பெயர் வீர சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி: ராகுல் காந்தி பேச்சால் புதிய சர்ச்சை
எனது பெயர் வீர சாவர்க்கர் அல்ல, எனது பெயர் ராகுல் காந்தி, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ராகுல் காந்தி பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,

ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “மோடி மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) என முழங்குகிறார். ஆனால் ரேப் இன் இந்தியா (இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்வோம்) என்பதுதான் நாட்டின் நிலையாக உள்ளது” என பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.


இது பாரதீய ஜனதா பெண் எம்.பி.க்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்சினையை கிளப்பிய அவர்கள், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரினர். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறி விட்டார்.

இந்த நிலையில், டெல்லியில் புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இந்த பிரச்சினையை கையில் எடுத்தார்.

அப்போது அவர், “என் பெயர் வீர சாவர்க்கர் அல்ல. என் பெயர் ராகுல் காந்தி. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். உண்மையை சொன்னதற்காக நான் மட்டுமல்ல, எந்த காங்கிரஸ் தொண்டனும் மன்னிப்பு கேட்க மாட்டான்” என ஆவேசமாக கூறினார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையொட்டி பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர், “காங்கிரஸ் கட்சியினரை நாடு மன்னிக்காது. ஏனென்றால் பல விஷயங்களில் அவர்கள் பாகிஸ்தானைப் போன்ற மொழியில் பேசுகின்றனர். பெண்களை இழிவுபடுத்தி பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று மீண்டும் பேசி உள்ளார். அவர் மன்னிப்பு கேட்டாலும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என கூறி உள்ளார்.

பாரதீய ஜனதாவின் மற்றொரு மூத்த தலைவர் சம்பித் பத்ரா, “அவர் (ராகுல் காந்தி) ஆயிரம் பிறவிகள் எடுத்தாலும், வீர சாவர்க்கர் ஆக முடியாது” என கூறினார்.

பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ், “ராகுல் காந்திக்கு பொருத்தமான பெயர் ராகுல் ஜின்னா. அவரது முஸ்லிம் ஆதரவு அரசியல் மற்றும் மனோபாவம் அவர் முகமது அலி ஜின்னா மரபு வந்தவர் என்று காட்டுகிறதே தவிர அவர் வீர சாவர்க்கரின் மரபு வந்தவர் அல்ல” என கூறி உள்ளார்.

பாரதீய ஜனதா சமூக ஊடக தலைவர் அமித் மாளவியா, “ஒரு விதத்தில் பார்த்தால் ராகுல் காந்தி என்பது சரிதான். அவர் ராகுல் சாவர்க்கர் ஆக முடியாது. வீர சாவர்க்கர் தேசிய தலைவர். இந்திய அரசியலில் நாகரிக தாக்கத்தை ஏற்படுத்தியவர். நேரு-காந்தியின் 5 தலைமுறை சாவர்க்கர் மரபுக்கு ஈடாகாது” என கூறினார்.

மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் உள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் ராகுல் காந்தியின் கருத்தை ஏற்கவில்லை; கண்டித்துள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “வீர சாவர்க்கர் ஒட்டுமொத்த நாட்டின் லட்சிய மனிதர். சாவர்க்கர் என்ற பெயர், நாட்டுக்கும், அவருக்கும் பெருமை சேர்ப்பதாகும். நேரு, காந்தி மாதிரி சாவர்க் கரும் தனது வாழ்வை நாட்டுக்காக தியாகம் செய்துள்ளார். இப்படிப்பட்ட லட்சிய மனிதர்கள் மதிக்கப்பட வேண்டும். இதில் சமரசத்துக்கு இடம் இல்லை” என கூறி உள்ளார்.