குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு - அசாம் கணபரிஷத் முடிவு


குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு - அசாம் கணபரிஷத் முடிவு
x
தினத்தந்தி 15 Dec 2019 7:37 PM GMT (Updated: 15 Dec 2019 7:37 PM GMT)

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர அசாம் கணபரிஷத் முடிவு செய்துள்ளது.

கவுகாத்தி,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறி உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் மேற்படி சட்டத்தை திரும்ப பெற உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டை நாட அசாமின் முக்கிய கட்சிகளில் ஒன்றான அசாம் கணபரிஷத் முடிவு செய்து உள்ளது. இது குறித்து கட்சியின் தலைவர் குமார் தீபக்தாஸ் கூறுகையில், ‘இந்த திருத்த சட்டத்தை திரும்ப பெறுவதற்காக சட்டரீதியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஏனெனில் இந்த சட்டத்தால் அசாமின் கலாசாரம், மொழி போன்ற தனித்துவ அடையாளங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்.

தனது கூட்டணி கட்சியான அசாம் கணபரிஷத், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடுவது பா.ஜனதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story