ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் வெற்றி; ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் வெற்றி; ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 23 Dec 2019 3:16 PM GMT (Updated: 23 Dec 2019 3:16 PM GMT)

ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

புதுடெல்லி,

ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு கடந்த நவம்பர் 30-ந் தேதி தொடங்கி டிசம்பர் 20-ந் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இன்று காலை 8  மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.  இதில் 5 மணி நிலவரப்படி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியானது தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, 44 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இது அரசு அமைக்க தேவையான தொகுதிகளை விட 3 தொகுதிகள் அதிகம்.

இதனால் அக்கட்சி கூட்டணி ஜார்கண்டில் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணியை வழிநடத்தி சென்ற ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.  அவர் அளித்துள்ள டுவிட்டர் செய்தியில், ஜார்கண்ட் மாநிலத்தில் பல வருடங்களாக பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி.

அதிக முயற்சியுடன் பா.ஜ.க.விற்காக உழைத்த கட்சி தொண்டர்களுக்கு எனது பாராட்டுகள் என தெரிவித்து உள்ளார். தொடர்ந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக எங்களது கட்சி உழைக்கும்.  மக்கள் விவகாரங்களை பற்றி கவனத்தில் கொள்வோம். ஹேமந்த் சோரன் மற்றும் ஜே.எம்.எம். தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்காக எனது வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

Next Story