குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களால் எதிர்க்க முடியாது - காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்


குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களால் எதிர்க்க முடியாது - காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்
x
தினத்தந்தி 19 Jan 2020 11:00 PM GMT (Updated: 19 Jan 2020 10:11 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து விட்டால், அதை மாநிலங்களால் எதிர்க்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இதைப்போல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இந்த சட்டத்தை எதிர்த்து உள்ளன. அதன்படி இந்த சட்டத்துக்கு எதிராக கேரளா, பஞ்சாப் மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) போன்றவற்றை மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர். இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்கக்கோரி கேரள அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டால், அதை மாநிலங்களால் எதிர்க்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய சட்ட மந்திரியுமான கபில்சிபல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் கூறுகையில், “குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என நான் நம்புகிறேன். இந்த சட்டத்துக்கு எதிராகவும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்ற ஒவ்வொரு மாநில சட்டசபைக்கும் உரிமை உண்டு.

ஆனால் இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து விட்டால், பின்னர் இதை மாநிலங்கள் எதிர்ப்பது சிக்கலாகி விடும். எனவே இந்த போராட்டங்கள் தொடர வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக கேரள இலக்கிய திருவிழாவில் நேற்று முன்தினம் பேசும்போது கபில்சிபல் கூறுகையில், “குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டதால், அதை நாங்கள் அமல்படுத்தமாட்டோம் என எந்த மாநிலத்தாலும் கூற முடியாது.

இது சாத்தியமற்றதும், அரசியல் சாசனத்துக்கு எதிரானதும் ஆகும். நீங்கள் எதிர்க்கலாம், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம், சட்டத்தை திரும்ப பெறுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்ளலாம். ஆனால் அமல்படுத்தமாட்டோம் என கூற முடியாது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story