கேரளாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு: உடல் நிலை தீவிர கண்காணிப்பு


கேரளாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு: உடல் நிலை தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 3 Feb 2020 7:30 AM GMT (Updated: 3 Feb 2020 11:07 PM GMT)

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதன் மூலம், அங்கு இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. அவர்களது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம்,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் சுமார் 25 நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வைரசின் அச்சுறுத்தல் காரணமாக சீனாவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இந்தியர்கள் மீட்கப்பட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இங்கு அவர்களை தனிமைப்படுத்தி வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவர்களில் கேரளாவின் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேப்போன்று ஆலப்புழாவில் ஒரு மாணவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர்களை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த மேலும் ஒரு மாணவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. காசர்கோடு மாவட்டத்தின் காக்கநாடு பகுதியை சேர்ந்த இவர் அங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3 பேரும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், அவர்களின் உடல்நிலையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சீனாவில் இருந்து கேரளா திரும்பி உள்ள 104 பேரின் ரத்த மாதிரிகள் நேற்றுமுன்தினம் வரை பரிசோதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் மேற்படி 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், இவர்கள் அனைவரும் உகான் நகரில் படித்து வந்தவர்கள் எனவும் மாநில சுகாதார மந்திரி சைலஜா கூறியுள்ளார்.

இதைப்போல மாநிலம் முழுவதும் 1999 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இதில் 75 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 1,924 பேர் வீடுகளில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவில் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்படுவதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பீதி அதிகரித்து உள்ளது. எனினும் மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் எனவும், மத்திய-மாநில அரசுகள் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் மாநில அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனிவார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் மருத்துவ கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக மந்திரி சைலஜா கூறுகையில், ‘நிபா, டெங்கு காய்ச்சலை போன்று கொரோனா வைரசுக்கும் எந்தவிதமான மருந்தும் இல்லை. உகானின் கொரோனா வைரஸ் பரவல் செய்தி தெரியவந்ததும், அங்குள்ள கேரள மாணவர்களை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எந்தவொரு சூழலையும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது’ என்று கூறினார்.

Next Story